/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொசு கேந்திரமாகும் காலிமனைகள்; உள்ளாட்சிகள் அலட்சியத்தால் அவதி
/
கொசு கேந்திரமாகும் காலிமனைகள்; உள்ளாட்சிகள் அலட்சியத்தால் அவதி
கொசு கேந்திரமாகும் காலிமனைகள்; உள்ளாட்சிகள் அலட்சியத்தால் அவதி
கொசு கேந்திரமாகும் காலிமனைகள்; உள்ளாட்சிகள் அலட்சியத்தால் அவதி
ADDED : செப் 11, 2024 12:20 AM
விருதுநகர் : விருதுநகரில் வளர்ந்து வரும் பகுதிகளில் போதிய வாறுகால் வசதி இல்லை. இந்நிலையில் காலிமனைகளில் மழைநீர் தேங்கி கொசு கேந்திரமாகி உள்ளது. இதை முறைப்படி அகற்றாமலும், உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காததாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகரின் நகராட்சி பகுதிகளின் வாறுகால்கள் அனைத்தும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அடைப்பு எடுக்கப்பட்டாலும், கொசுத்தொல்லை அதிகளவிலே உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள், கொசு மருந்து அடிக்கும் பணிகளும் மந்தமாகவே நடந்து வருகின்றன.
இந்நிலையில் நகராட்சி அல்லாத பகுதிகளில் இந்த தடுப்பு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இப்பகுதிகள் வளர்ந்து வரும் பகுதிகளாக இருப்பதால் தெருவில் குடியிருப்புகளுக்கு இணையாக ஆங்காங்கே காலிமனைகளும் இருக்கின்றன. மக்கள் தங்கள் வீட்டின் வசதிக்காக தரைத்தளத்தில் இருந்து உயர்த்தும் போது காலிமனைகள் பள்ளமாகி விடுகின்றன. சிறிது மழை பெய்தாலும் இவற்றில் நாட்கணக்கில் மழைநீர் தேங்கி உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் இதற்காக எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக தேங்கிய மழைநீரில் எண்ணெய் பந்து, திரவ கொசு மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதையும் ஊராட்சிகள் செய்வதில்லை. இதனால் மாலை 6:00 மணி ஆனாலே கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது.
லெட்சுமி நகர், சூலக்கரைமேடு, பாண்டியன்நகர், நிலா நகர், ரோஜா நகர், பஞ்சாயத்து யூனியன் காலனி, என்.ஜி.ஓ.,காலனி, ஆனைக்குழாய் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் காலிமனைகளில் மழைநீர் தேங்கி மக்கள் தவிப்பை சந்திக்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.