/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
‛பாரத் பசுதான்' செயலியால் பிரச்னை கால்நடை உதவி மருத்துவர்கள் அவதி
/
‛பாரத் பசுதான்' செயலியால் பிரச்னை கால்நடை உதவி மருத்துவர்கள் அவதி
‛பாரத் பசுதான்' செயலியால் பிரச்னை கால்நடை உதவி மருத்துவர்கள் அவதி
‛பாரத் பசுதான்' செயலியால் பிரச்னை கால்நடை உதவி மருத்துவர்கள் அவதி
ADDED : ஜூலை 23, 2024 08:35 PM
விருதுநகர்:‛பாரத் பசுதான் செயலியில் ஒவ்வொரு முறையும் உரிமையாளர்களிடம் இருந்து ஓ.டி.பி., பெற்று, உள்ளீடு செய்ய வேண்டி இருப்பதால் பணிகள் பாதிக்கப்படுகிறது' என, கால்நடை உதவி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு கால்நடைகள் குறித்த தகவல்களை நவீனமயமாக்க, பாரத் பசு தான் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் கால்நடை உரிமையாளர்களுக்கு கணக்கு துவங்கும் போது ஆதார் எண், முகவரி, அலைபேசி எண், கால்நடையின் வகை, நிறம், ஆண், பெண் உள்ளிட்ட பல விவரங்களை பதிவேற்றம் செய்த பின் ஓ.டி.பி., பெற்று உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன் பின், கால்நடைக்கு தனித்துவ அடையாளம் எண் வழங்கப்படும். பிறகு மஞ்சள் நிறத்திலான பட்டை காதில் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் கால்நடைக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது; அடுத்த தடுப்பூசிக்கான தேதி, நோய் விவரம், மருத்துவ சிகிச்சை, புதிதாக கால்நடைகளை வாங்கிய உரிமையாளர்கள் விவரம் உள்ளிட்டவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் உரிமையாளர்களிடம் இருந்து, ஓ.டி.பி., பெற்று செயலியில் உள்ளீடு செய்ய வேண்டியுள்ளது. பல கிராமங்களில் நெட்வொர்க் இல்லாத நேரத்தில் செயலியில் பணிகளை முடிக்க, ஒரு நபருக்கு குறைந்தது அரை மணி நேரமாகிறது.
மேலும், உரிமையாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்த அலைபேசியை கொண்டு வராத போது, ஓ.டி.பி., எண் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் மருத்துவர்கள் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த நிலை ஒன்பது மாதங்களாக நீடிப்பதால், மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு மாற்று வழியை கண்டுபிடிக்க கோரி, உயர் அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் புலம்புகின்றனர்.

