/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வறட்சி பூமியில் வாட்டர் ஆப்பிள்: விவசாயி சாதனை
/
வறட்சி பூமியில் வாட்டர் ஆப்பிள்: விவசாயி சாதனை
ADDED : ஜூன் 01, 2024 04:07 AM

காரியாபட்டி: மலைப்பிரதேசங்களில் விளையும் வாட்டர் ஆப்பிளை வறட்சி பூமியில் விளைவித்து விவசாயி ராமநாதன்.சாதனை படைத்துள்ளார்
காரியாபட்டி வரலொட்டி வானம் பார்த்த பூமி. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பெரும்பாலும் தரிசு நிலங்களாக உள்ளன.
இந்நிலையில் மாத்தி யோசித்து இப்பகுதியில் இல்லாத விவசாயத்தை செய்ய வேண்டும் என விவசாயி ராமநாதன் முயற்சி எடுத்தார்.
இதற்காக மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய பன்னீர் ஆப்பிள், ஜம்பு நாவல் பழம் என பெயர் கொண்ட வாட்டர் ஆப்பிளை வறண்ட பூமியில் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதிக வெப்பம் இருக்கக் கூடாது. மிதமான குளிரில் வளரும் இந்த வகையான செடிகள் மருத்துவ குணம் கொண்டது.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவத்தில் இதன் பழச்சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இனிப்பு சுவை இருந்தாலும் கொழுப்பு, குளுக்கோஸ் ஜீரோ சதவீதம்தான். சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிட முடியும்.
இவ்வகையான பழ மரக்கன்றுகளை நட்டு வறட்சியான பூமியிலும் விளைவிக்க முடியும் என சாதித்து காட்டியுள்ளார்.
மாற்றி யோசித்தேன் நல்ல பலன் கிடைத்தது
ராமநாதன், விவசாயி, வரலொட்டி: பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். காய்கறி விவசாயம் செய்து வந்தேன்.
போதிய வருமானம் கிடைக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன் வாட்டர் ஆப்பிள் செடிகளை வளர்க்க யோசித்தேன். இங்குள்ள சீதோஷன நிலைக்கு விளைவிக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது.
இருந்தாலும் எப்படியாவது விளைவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு ஏக்கரில் 300 மரக்கன்றுகள் நட்டேன். நன்கு வளர்ந்து விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியினர் வாட்டர் ஆப்பிள் குறித்து அதிகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இதை எப்படி சந்தைப்படுத்துவது என்கிற தயக்கம் இருந்தது. மருத்துவ குணம் நிறைந்த பழம் என்பதை கேள்விப்பட்டு, அதிகமாக வாங்கி செல்கின்றனர். சிகப்பு பழம் கி.ரூ.80 முதல் 100 வரையும், பச்சை பழம் கி.ரூ.60 முதல் 80 வரை விற்பனையாகிறது.
முழுக்க இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கிறேன். தற்போது இப்பழத்திற்கான சீசன் கிடையாது. சீசனை கடந்து நல்ல விளைச்சல் உள்ளது. நல்ல வருமானம் கிடைக்கிறது.
மலைப் பிரதேசங்களில் மட்டும் விளையும் என்பதை தகர்த்து, உழைத்தால் வறட்சி பகுதியிலும் விளைவித்து சாதிக்க முடியும் என்றார்.