/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேடானதால் வீணாகும் தண்ணீர்; பலவீனமான கரைகள்
/
மேடானதால் வீணாகும் தண்ணீர்; பலவீனமான கரைகள்
ADDED : ஜூலை 18, 2024 04:11 AM

காரியாபட்டி : கண்மாய் உள் பகுதி மண் மேடாக இருப்பதால்மழை நீரை தேக்க முடியாமல் வீணாக வெளியேறுவது, கரை பலவீனமாக இருப்பதால், கண்மாய் நிரம்பும் போது கரை உடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் ஸ்ரீராம்பூர் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டி ஸ்ரீராம்பூரில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ஸ்ரீராம்பூர் கண்மாய் 80 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 2 மடைகள் உள்ளன. கண்மாய்க்கு நீர் வரத்து ஆதாரமாக காட்டுப்பகுதியில் பெய்யும் மழை நீர் இக்கண்மாய்க்கு வரும். விட்டிராலேந்தல் கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரி நீர், வரத்துக் கால்வாய் மூலம் வரும் தண்ணீரால் இக்கண்மாய் நிரம்பும்.
கண்மாய் நீரை மட்டுமே நம்பி இதுவரை நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. சிறிதளவு அப்பகுதியில் மழை பெய்தால் கூட கண்மாய்க்கு நீர் வந்துவிடும். அதன் மூலம் விவசாயத்தை விவசாயிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் இக்கண்மாய் தூர்வாரப்பட்டது. தற்போது சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, மண் மேடாக உள்ளது. மடைகள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கரை பலவீனமாக இருப்பதால் கண்மாய் நிரம்பும் போது உடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. விவசாயம் பாதிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
துார்வார வேண்டும்
சிவக்குமார், விவசாயி: நெல் விவசாயத்தை நம்பித்தான் இக்கிராமம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறிதளவு மழை பெய்தால் கூட கண்மாய்க்கு தண்ணீர் வந்துவிடும். 8 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் துார் வாரப்பட்டது. சரியாக துார் வாராததால் கண்மாயின் உள்பகுதி மேடாக உள்ளது. மழை நீரை தேக்க முடியவில்லை. வீணாக வெளியேறி வருகிறது.
கண்மாய், வரத்துக்கால்வாயை துார் வார வேண்டும். நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தின் கீழ் வைகை ஆற்று தண்ணீரை இக்கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடையும் அச்சம்
மணிக்காளை, விவசாயி: கண்மாய் கரை மழைக்கு அரிப்பு ஏற்பட்டு பலவீனமாக உள்ளது. அதிக அளவில் மழை பெய்து கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் போது தாக்கு பிடிக்க முடியாமல் கரை உடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.
விவசாயம் பாதிக்குமோ என்கிற அச்சம் உள்ளது. மடைகள் சேதம் அடைந்துஉள்ளதால், கற்களை கொண்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, கண்மாயை ஆழப்படுத்த வேண்டும். பலவீனமான கரையை சீரமைத்து, உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மடைகளை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.