/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்
/
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்
ADDED : ஜூன் 21, 2024 03:51 AM
விருதுநகர்: 2024ல் சிறப்பு குழுக்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 102 பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. சட்ட விரோத பட்டாசுகள் தயாரிப்பு தொடர்பான விபரங்களை புகாராக தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில்1098 பட்டாசு ஆலைகள், 3000 பட்டாசு கடைகள் என மொத்தம் 4000க்கும் மேற்பட்ட பட்டாசு தொழில் தொடர்பான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு உற்பத்தியில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் போர்மேன்கள், தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 57 ஆலைகளுக்கு ரூ.5000 வீதம் இதுவரை ரூ.2,85,000 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று முறையிலும் பயிற்சிகள் பெறாமல் தவிர்த்த பட்டாசு ஆலைகளின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தாண்டு ஜனவரி முதல் மே வரை 1977 தொழிலாளர்கள், 428 போர்மேன்கள், 30 ஆலை உரிமையாளர்கள் என 2435 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரால் நான்கு சிறப்பு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பட்டாசு ஆலைகள் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த குழுக்களால் 2024ல் தற்போது வரை 504 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ததில் 102 ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யவும், நிரந்தரமாக ரத்து செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு வாட்ஸ் ஆப் எண். 94439 67578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.