/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் லாரி முனையம் அமைவது எப்போது சர்வீஸ் ரோட்டில் நிற்கும் லாரிகளால் விபத்து தான் மிச்சம்
/
விருதுநகரில் லாரி முனையம் அமைவது எப்போது சர்வீஸ் ரோட்டில் நிற்கும் லாரிகளால் விபத்து தான் மிச்சம்
விருதுநகரில் லாரி முனையம் அமைவது எப்போது சர்வீஸ் ரோட்டில் நிற்கும் லாரிகளால் விபத்து தான் மிச்சம்
விருதுநகரில் லாரி முனையம் அமைவது எப்போது சர்வீஸ் ரோட்டில் நிற்கும் லாரிகளால் விபத்து தான் மிச்சம்
ADDED : மே 04, 2024 04:44 AM

விருதுநகர்: விருதுநகரின் நீண்ட நாள் கோரிக்கையான லாரி முனையம் எப்போது அமையும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நான்கு வழிச்சாலை, மாநில நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடுகளில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அச்சம் தான் ஏற்பட்டுள்ளது.
சிவகாசிக்கு அடுத்தப்படியாக விருதுநகர் முக்கியமான தொழில் நகரம். பருப்பு மில், எண்ணெய் ஆலைகள், வத்தல் கமிஷன் மண்டிகள், ஜின்னிங் மில்கள் போன்ற முக்கியமான வர்த்தகங்கள் நடக்கின்றன.
இதனால் தினசரி கனரக லாரிகள் அதிகம் வந்து செல்லும். நகர் பகுதிகளிலும் அதிகளவில் லாரிகள் போக்குவரத்து இருக்கும். சிவகாசியில் லாரி முனையம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது போல் விருதுநகரிலும் கோரிக்கை உள்ளது.
கட்சிகள் 2021ல் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக இதை தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. சர்வீஸ் ரோடுகளிலும், மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளிலும் தான் லாரிகள் நிறுத்தப்படுகின்றன.
விபத்து ஏதாவது ஏற்படும் அபாயம் இருக்கும் போது, டிராபிக் போலீசார் லாரியை எடுக்க அறிவுறுத்துகின்றனர்.
அப்போது டிரைவர்கள் பலர், நாங்களே விரும்பியா இங்கு நிறுத்துகிறோம். எங்களுக்கு வேறு நிறுத்துமிடம் ஏது உள்ளது,” என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலை தவிர்க்க வேண்டும். சர்வீஸ் ரோடுகளில் நிற்கும் லாரிகளால் பலர் விபத்தை சந்தித்துள்ளனர்.
இரவு வேகமாக டூவீலர், காரில் செல்வோர் போதி வெளிச்சமின்றி நிற்கும் லாரி மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர்.
தொழில் மாவட்டமான விருதுநகரின் மையத்தில் நான்கு வழிச்சாலையும் செல்கிறது.
இதன் மூலம் விருதுநகருக்கு தினசரி ஆயிரக்கணக்கில் லாரிகள் வந்து செல்கின்றன. அந்த லாரிகளும் சர்வீஸ் ரோட்டில் நின்று செல்லும் சூழல் உள்ளது.
இவ்வாறு சரக்குகள், உணவு பொருட்களை வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் இந்த லாரி டிரைவர்கள், க்ளீனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
லாரி முனையம் அமைந்தால் கழிப்பிட, குளியல் அறை வசதி கிடைக்கும். லாரிகள் பாதுகாப்பான நிறுத்துமிடமாக இருக்கும். டிரைவர்கள், க்ளீனர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக இருக்கும்.
விருதுநகர் சிறிய நகராக இருக்கும் அதே நேரம் ரோடு வசதியும் அதிகம் உள்ளது.
இதனால் வேறு வழியின்றி அனைத்து லாரிகளும் ரோட்டிலே தான் நிறுத்தப்படுகின்றன.
மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்து லாரி முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே இடத்தில் லாரிகள்
முருகன், நகரச் செயலாளர், சி.பி.எம்., விருதுநகர்: சர்வீஸ் ரோடுகளில் லாரிகள் நிறுத்தப்படுவதால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக இருப்பது ஒரே இடத்தில் அனைத்து லாரிகளும் கூடும் வகையில் லாரி முனையம் அமைக்கப்படுவது தான். இது மட்டுமே நிரந்தர நன்மையாக இருக்கும். மக்கள், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் நீங்குவர்.
வாழ்க்கையை இழக்கும் சூழல்
சந்தனபாண்டி, விருதுநகர்: லாரிகள் நிறுத்தப்படும் ரோட்டோரங்களில் இரவில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை.
இதனால் பலர் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். மேலும் விபத்து காரணமாக டிரைவர்கள், கிளீனர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
வளர்ந்து வரும் விருதுநகரில் மக்களுக்கு சேவை அளிக்கும் கனரக வாகனங்களுக்கு லாரி முனையம் அமைக்க வேண்டும்.