/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் ஆதாரமான தடுப்பணையை உடைத்தது ஏன்? விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
/
குடிநீர் ஆதாரமான தடுப்பணையை உடைத்தது ஏன்? விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
குடிநீர் ஆதாரமான தடுப்பணையை உடைத்தது ஏன்? விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
குடிநீர் ஆதாரமான தடுப்பணையை உடைத்தது ஏன்? விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
ADDED : ஆக 30, 2024 05:41 AM
விருதுநகர் : விருதுநகர் மக்களின் குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அருகே உள்ள தடுப்பணையை நகராட்சி மன்ற அனுமதியின்றி பொதுப்பணித்துறை உடைத்தது ஏன் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
விருதுநகர் நகராட்சியில் சாதாரண, அவசர கூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிழ்செல்வி, பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
கூட்டம் துவங்கியதும், விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் அணையின் அருகே நகராட்சிக்கு சொந்தமான தடுப்பணையை பொதுப்பணித்துறை இடித்ததற்கு நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்துராமன், ஜெயக்குமார், மதியழகன், கலையரசன், சுல்தான் அலாவுதீன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த தலைவர், தடுப்பணையின் உயரத்தை 3 அடி குறைத்தால் தான் புதிய கதவணை அமைக்கும் பணி செய்ய முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அதனால் தான் இடிக்கப்பட்டது, என்றார்.
கவுன்சிலர்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக இப்படித்தான் பொது பணித்துறையினர் கூறி வருகின்றனர். மன்றத்தின் அனுமதியின்றி இடித்தது தவறு,” என கண்டனத்தை பதிவு செய்தனர்.
ராஜ்குமார்(காங். ): தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ஒராண்டு ஆகி விட்டது. தற்போது வரை அடைப்பை நீக்க நடவடிக்கை இல்லை.
தமிழ்செல்வி, கமிஷனர்: அடைப்பு நீக்கும் ஜெட்ராடர் வாகனம் பழுது நீக்கி நாளை வந்தவுடன் பணிகள் துவங்கப்படும்.
ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: நகரின் பெரும்பாலான பாதாளசாக்கடை மேன்ஹோலில் மண் தேங்கியுள்ளது. அதனை அகற்றாவிட்டால் அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் தேங்கி குடிநீரில் கலக்கும் நிலை ஏற்படும்.
முத்துலெட்சுமி, சுயேச்சை: உப்பு சுவையுள்ள தண்ணீர் வழங்குவதால் பொது மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறாக நடந்த விவாதத்திற்கு பின் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

