/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுமா
/
புது பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுமா
ADDED : செப் 11, 2024 12:24 AM

விருதுநகர் : விருதுநகரில் 33 ஆண்டுகளுக்கு பிறகு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வரும் புது பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்கள் வந்து செல்லவும், கூடுதல் வாகன நிறுத்த வசதி செய்யப்பட வேண்டுமென மக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் பல்வேறு தடைகளை கடந்து ஆக. 21 முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இடையிடையே பஸ்கள் வந்து செல்லாமல் புறக்கணித்து வந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் தற்போது பஸ்கள் வந்து செல்கின்றன. இருப்பினும் இரவு நேரங்களில் பஸ்கள் வந்து செல்வது குறைவாக தான் உள்ளது. இதே நேரம் புது பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவது சுத்தமாக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு முன்பு வரை புது பஸ் ஸ்டாண்டில் தான் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர். எஸ்.இ.டி.சி., பஸ்கள் அதிகளவில் வந்து சென்றன. கொரோனா ஊரடங்கிற்கு பின் புது பஸ் ஸ்டாண்ட் காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டதால் பஸ்கள் லெட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. நான்கு ஆண்டுகள் ஆகியும், எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட நிலையில் லெட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை வரிசையாக பஸ்கள் நிறுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த தொந்தரவு அதிகம் உள்ளது. மதுரை, திருமங்கலம் பஸ்களும் இந்த வழியை கடப்பதற்கு பெரும்பாடு படுகின்றனர்.மேலும் இந்த ஆம்னி பஸ்கள் நான்கு வழிச்சாலையில் நின்று பயணிகளை இறக்குவதால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
இத்தகைய நெரிசலான சூழலை தவிர்த்து ஆம்னி பஸ்களை புது பஸ் ஸ்டாண்டிலே வந்து செல்ல ஏற்பாடு செய்தால் தீர்வு கிடைக்கும். புது பஸ் ஸ்டாண்டில் இரவும் பாதுகாப்பானதாக மாறும். எப்போதும் வாகன, மக்கள் நடமாட்டம் இருக்கும். எம்.ஜி.ஆர்.சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருப்பதால் அந்த வழித்தடமும் பிஸியாக இருக்கும்.
இதே போல் புது பஸ் ஸ்டாண்டில் மற்றொரு வசதியாக கூடுதல் வாகன நிறுத்தம் தேவையாக உள்ளது. தற்போது அதிகளவில் பஸ்கள் வந்து செல்வதால், டூவீலர் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். ஏற்கனவே உள்ள வாகன நிறுத்தம் நிரம்பி வழியும் நிலையில் நிறுத்த இடமில்லாததால் மரங்களுக்கு அடியிலும், வேறு இடங்களிலும் வாகன ஓட்டிகள் நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கூடுதல் வாகன நிறுத்தம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் ஆம்னி பஸ்கள், எஸ்.இ.டி.சி., பஸ்களையும் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.