/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடலையில் புழுக்கள் தாக்குதல் விவசாயிகள் வேதனை
/
கடலையில் புழுக்கள் தாக்குதல் விவசாயிகள் வேதனை
ADDED : மே 24, 2024 02:00 AM

காரியாபட்டி: கடலையில் பூ பூக்கும் சமயத்தில் புழுக்கள் தாக்குதலால் செடிகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி எஸ்.மறைக்குளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை கால சாகுபடியாக கடலை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சி பூ பூக்கும் தருணத்தில் உள்ளது. களையெடுப்பு பணிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் பச்சப் புழுக்கள் தாக்கி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் கள்ளிப்பூச்சி, சொரட்டை, நோய் தாக்கி இலைகளில் ஓட்டை விழுந்து, பிஞ்சி விடுவதை தடுத்து பாதிப்பை உண்டாக்கி வருகிறது.
விளைச்சல் பாதிக்கப்படுமா என்கிற சூழ்நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தங்கச்சாமி, விவசாயி, கூறியதாவது. வெங்காயம் பயிரிட்டு வருகிறோம். நிலங்களை தரிசாக போடக்கூடாது என்பதற்காக கோடையில் கடலை பயிரிடுவோம்.
3 மாத பயிர் என்பதால் ஓரளவிற்கு பலன் கிடைக்கும் என பயிரிடுவது வழக்கம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.
நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 20 லிருந்து 25 மூடைகள் கடலை கிடைக்கும். ஒரு முடையின் விலை ரூ. 2 ஆயிரத்து 400 வரை விற்பனையாகும். கஷ்டப்பட்டதற்கு ஓரளவிற்கு பலன் இருக்கும்.
தற்போது கோடை மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி செடிகள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி பச்சப் புழுக்கள் தாக்கி பயிர்கள் பாதிப்படைந்து வருகிறது. கள்ளிப்பூச்சி, சொரட்டை விழுவதால் பிஞ்சு விடுவது குறைந்து விளைச்சல் பாதிக்குமோ என வேதனையாக உள்ளது.
செலவு செய்த பணம் கிடைக்குமா என தெரியவில்லை. கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்கிற கவலை உள்ளது, என்றார்.