ADDED : ஆக 06, 2024 04:34 AM

சாத்துார்: தேங்கும் கழிவுநீர், படுமோசமான ரோடு, துார்ந்து போன வாறுகால் உட்பட பல்வேறு சிரமத்திற்குளாகி வருகின்றனர் புல்வாய் பட்டி ஊராட்சி மக்கள்.
புல் வாய்ப்பட்டி ஊராட்சியில் நள்ளிச்சத்திரம், புல்வாய்ப்பட்டி ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால், உள்ளிட்ட வசதிகள் கூட இல்லை. ஊராட்சியில் உள்ள தெருக்கள் குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
சாக்கடை வசதி இல்லாத நிலையில் ரோட்டிலும் காலியாக உள்ள இடத்திலும் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது.
ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் இல்லை. குப்பை வாங்குவதற்கும் வீடுகளுக்கு ஆட்கள் வருவது கிடையாது. காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
சாக்கடை வாறுகால் இடிந்து துார்ந்து போன நிலையில் காணப்படுகிறது. சாக்கடையை தள்ள துப்புரவு பணியாளர்கள் வருவது கிடையாது. மகளிர் சுய உதவி குழு கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
ஊராட்சிக்காக கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகம் பணிகள் முடிந்தும் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.
மேல்நிலைத் தொட்டிகள் சேதம் அடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. பொது சுகாதார வளாகம் இல்லாத நிலையில் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.