ADDED : மார் 04, 2025 06:45 AM

சாத்துார்: வாறுகால், கழிப்பறை, உலர்களம் வசதிகள் இல்லை, கட்டியும் செயல்பாட்டிற்கு வராத குளியல் தொட்டி உட்பட பல்வேறு பிரச்னைகளால் போத்தி ரெட்டிபட்டி ஊராட்சியில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
போத்தி ரெட்டிபட்டி ஊராட்சியில் 15 தெருக்கள் உள்ளன. பெரும்பாலான தெருக்களில் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது.ஆனால் முறையான வாறுகால் வசதி இல்லை. பாதையின் நடுவில் பள்ளம் தோண்டி கழிவு நீரை கடத்தி வருகின்றனர். இந்தக் கழிவு நீர் முழுவதும் ஊருக்கு அருகில் உள்ள பள்ளத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் கடிப்பதால் மக்கள் துாக்கம் இன்றி அவதிப்படுகின்றனர்.
ஊராட்சி, வி. ஏ.ஓ. அலுவலக கட்டடங்கள் சேதமடைந்து கூரை இடிந்து விடும் நிலையில் உள்ளது.பொது சுகாதார வளாகங்கள் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் தற்போது முள் செடி வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. இதனால் திறந்த வெளியில் கழிக்கும் நிலை உள்ளது.
விவசாய உலர்களம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் விளைவிக்கும் பயிர்களை ரோட்டில் பரப்பி விவசாயப் பணிகளை மக்கள் மேற்கொள்கின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடையும் சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. குடிநீர் துவர்ப்பாக உள்ளதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி வருகின்றனர்.
கட்டடங்கள் சீரமைக்க வேண்டும்
சண்முகம், போத்திரெட்டிபட்டி: ஊராட்சி, வி. ஏ.ஓ., மகளிர் சுயஉதவிக் குழு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு அந்தப் பணி நடந்து வருகிறது. இதே போன்று சேதமடைந்து உள்ள அரசு கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதையின் நடுவில் கழிவுநீர்
மாரியப்பன், போத்தி ரெட்டிபட்டி: வாறுகால் சுத்தம் செய்ய போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லாத நிலையில் மாதம் ஒருமுறை மட்டுமே வாறு கால்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. வடக்குத் தெருவிலும் நடுத்தெருவிலும் பாதையின் நடுவில் கழிவு நீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.பயணிகள் நிழற்குடை கட்டித் தர வேண்டும். குளியல் தொட்டி கட்டி செயல்பாட்டிற்கு வரவில்லை காட்சி பொருளாக உள்ளது.
குடிநீர் விலைக்கு வாங்கும் நிலை
லட்சுமி, போத்தி ரெட்டிபட்டி: ஊராட்சியில் வினியோகமாகும் குடிநீர் துவர்ப்பு சுவையுடன் உள்ளது.இதன் காரணமாக வண்டிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ரூ 10 கொடுத்து விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.