ADDED : மார் 25, 2025 05:52 AM
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்க வேண்டும் என மக்கள், பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. இதன் எல்லைக்கு உட்பட்ட ஜமீன் சல்வார்பட்டி, லட்சுமியாபுரம், பூச்சக்காப்பட்டி, பெத்தலுப்பட்டி சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் திடீரென ஏற்படும் வெடி விபத்தின் போது காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு சிரமம் ஏற்படுகின்றது. ஏனெனில் வெடி விபத்து ஏற்பட்டால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகாசியில் இருந்துதான் 108 ஆம்புலன்ஸ் வர வேண்டி உள்ளது.
இதனால் ஏற்படும் தாமதத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அருகில் உள்ள நாரணாபுரத்திலேயே 108 ஆம்புலன்ஸ் சேவை இருந்தால் உடனடி சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படும்.
எனவே நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.