/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருப்பரங்குன்றம் அறப்போராட்டம் மாவட்டத்தில் 130 பேர் கைது
/
திருப்பரங்குன்றம் அறப்போராட்டம் மாவட்டத்தில் 130 பேர் கைது
திருப்பரங்குன்றம் அறப்போராட்டம் மாவட்டத்தில் 130 பேர் கைது
திருப்பரங்குன்றம் அறப்போராட்டம் மாவட்டத்தில் 130 பேர் கைது
ADDED : பிப் 05, 2025 04:57 AM

விருதுநகர்: மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கார், ரயிலில் செல்ல முயன்ற ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., நிர்வாகிகள் 130 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டப்பட்டனர்.
இதனால் மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் கண்காணிப்பை அதிகரித்தது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், சாத்துார் ரயில்வே ஸ்டேஷன்களில் நேற்று போலீசார் ரயில்களில் ஏறி சோதனை செய்தனர்.
இந்நிலையில் விருது நகர் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், ஸ்ரீவில்லிபுத்துாரில் பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை, சாத்துார் சட்டசபை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் மாரிக்கண்ணு ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் யுவராஜ் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அழைத்து வரப்பட்டார். நேற்று காலையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வள்ளியூரில் இருந்து மதுரை சென்ற ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் பொன்னையா கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அழைத்து வரப்பட்டார்.
இதே ரயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து விருதுநகர் வந்த ஆர்.எஸ்.எஸ்., தமிழகம், கேரள மாநில பொறுப்பாளர் வன்னியராஜனை போலீசார் ரயிலில் இருந்து இறக்கினர்.
அவர் விருதுநகரில் இறங்க டிக்கெட் எடுத்திருப்பதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின் ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., நிர்வாகிகள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நெற்றியில் திருநீறு பட்டை, காவி உடை அணிந்து வந்தவர்களை தடுத்த போலீசார் திருப்பி அனுப்பியதால் பயணிகள் கொந்தளிப்பிற்கு உள்ளாகினர்.