/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆண்டுகள் போராட்டம் யாதவர் நகர் குடியிருப்போர் அவதி
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆண்டுகள் போராட்டம் யாதவர் நகர் குடியிருப்போர் அவதி
அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆண்டுகள் போராட்டம் யாதவர் நகர் குடியிருப்போர் அவதி
அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆண்டுகள் போராட்டம் யாதவர் நகர் குடியிருப்போர் அவதி
ADDED : அக் 23, 2024 04:11 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை யாதவர் நகர் குடியிருப்பில் தேவையான அடிப்படை வசதிகளில் இல்லாமல் 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து பலனில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட யாதவர் நகரின் குடியிருப்போர் நல சங்க தலைவர் ராஜு, துணைத் தலைவர் புஷ்பம், செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் குருசாமி, பொருளாளர் முத்துராக்கு மற்றும் உறுப்பினர்கள் சரவணன், ராமமூர்த்தி, சுப்புராஜ் கூறியதாவது:
யாதவர் நகர் உருவாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமான பிரச்சனையான வாறுகால், ரோடு அமைக்க ஊராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
எங்கள் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வாறுகால்கள் இல்லாததால் கழிவுநீர் தெருவில் விடப்படுகிறது. மழைக்காலத்தில் எங்கள் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது.
மழைநீர் வெளியேற வாறுகால் வசதி இல்லாததால் யாதவர் நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. சிறிய மழை பெய்தாலும் கூட வெள்ளம் தேங்கி விடுகிறது.
தெருக்களில் ரோடு போடப்படவில்லை. குண்டும் குழியுமாக இருப்பதால் தெருக்களில் நடக்க முடியாமல் வயதானவர்கள் தடுக்கி விழ வேண்டியுள்ளது. தெரு விளக்கு வசதியும் இல்லை.
இருட்டும் நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் வாறுகால்கள் அமைத்து கழிவுநீரை கஞ்சநாயக்கன்பட்டி மெயின் ரோட்டில் உள்ள மெயின் வாறுகாலில் இணைக்க பல முறை மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
யாதவர் நகர் அருகில் கட்டப்பன் ஊருணி உள்ளது. இதில் தான் குப்பையை கொட்டுகின்றனர். பலமுறை ஊருணியை பராமரிப்பு செய்தாலும் பயன் இல்லை.
ஊருணியில் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பகல், இரவு பாராது கடிக்கிறது. ஊருணியும் சுகாதார கேடாக உள்ளது. இனி மழை காலம் துவங்குகிற நிலையில் இந்த பகுதியில் குடியிருப்போர் வெள்ளம் சூழ்ந்து விடுமோ என்ற பயத்திலேயே உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து யாதவர் நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என்றனர்.