/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து 3 பேர் பலி; 3 பெண்கள் படுகாயம்
/
சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து 3 பேர் பலி; 3 பெண்கள் படுகாயம்
சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து 3 பேர் பலி; 3 பெண்கள் படுகாயம்
சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து 3 பேர் பலி; 3 பெண்கள் படுகாயம்
UPDATED : ஜூலை 22, 2025 12:01 PM
ADDED : ஜூலை 22, 2025 12:29 AM

சிவகாசி; சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் இறந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் கோபி. இவர், நாரணாபுரம் அனுப்பங்குளம் ரோட்டில், 'ஸ்ரீமாரியம்மன் பயர் ஒர்க்ஸ்' என்ற பெயரில், நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இங்கு, 50க்கும் மேற்பட்ட அறைகளில், பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேற்று, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை, 3:40 மணியளவில் பேன்சி ரக பட்டாசுக்கு தேவையான மணி மருந்து கொண்டு சென்ற போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நடந்தது. இதில், முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கார்த்திகேயன், 24, லட்சுமி, 45, சங்கீதா, 40, ஆகிய தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
எம்.மாரியம்மாள், 53, நாகலட்சுமி, 55, டி.மாரியம்மாள், 50, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், டி.மாரியம்மாள் இறந்த கார்த்திகேயனின் தாய். விபத்தில் ஆறு அறைகள் தரைமட்டமாகின. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பெசோ அதிகாரிகள், வருவாய்த்துறையினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
விபத்து நடந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆலை உரிமையாளர் கோபி, போர்மேன் செல்வகுமார் மீது கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தனர்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா, 4 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 நாளில் 14 பேர் பலி
* இந்த மாதம் மட்டும் 20 நாட்களில் நடந்த மூன்று வெடி விபத்துகளில் 14 பேர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்துள்ளனர்.
* சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் ஜூலை 1ல் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர்; நான்கு பேர் காயமடைந்தனர்.
* ஜூலை 6ல் சாத்துார் அருகே கீழதாயில்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்; 6 பேர் காயமடைந்தனர்.
* நேற்று நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் பலியாகினர். மூன்று பேர் காயம் அடைந்தனர்.