/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்; அறைகள் தரைமட்டம்
/
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்; அறைகள் தரைமட்டம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்; அறைகள் தரைமட்டம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்; அறைகள் தரைமட்டம்
ADDED : ஏப் 27, 2025 03:13 AM

சிவகாசி: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், மூன்று பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.  மேலும், ஏழு பெண்கள் காயமடைந்தனர்; மூன்று அறைகள் தரைமட்டமாகின.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் காலனியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 57. எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில், பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 70 அறைகள் இருந்தன. இங்கு, 17 ஆண்கள், 134 பெண்கள் பணிபுரிந்தனர்.
அலறியடித்து ஓட்டம்
தொழிலாளர்கள் நேற்று, பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு அறையில், ரசாயன கலவை செலுத்தும் பணியின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
உடனடியாக அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடிக்க துவங்கின. தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இதில், எம்.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி கலைச்செல்வி, 33, சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள், 51, கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி, 45, ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எம்.புதுப்பட்டி பாக்கியலட்சுமி, 55, ரெங்கபாளையம் லட்சுமி, கோபாலன் பட்டி ராமசுப்பு, கூமாபட்டி கோமதி, 55, உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
அவர்கள், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி., கண்ணன், சப்-கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பார்வையிட்டனர். ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக, ஆலை போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகியோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
நிவாரணம்
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய்; பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா 1 லட்சம்; லேசான காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா, 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

