ADDED : ஜூலை 17, 2025 03:04 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வீட்டில் புகுந்து 45.5 பவுன் நகை, 50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் வடக்குப்பட்டியை சேர்ந்தவர் சுதர்சன் 40. தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். மனைவி காயத்ரி 35. இவர்கள் 2 மகன்கள், பெரியம்மா மற்றும் மாமனாருடன் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு காயத்ரியின் பெரியம்மா சுப்புலட்சுமி 3 பவுன் செயினை கழற்றி அருகில் வைத்து விட்டு துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது செயினை காணவில்லை. சந்தேகப்பட்டு அருகில் உள்ள அறைக்குச் சென்று பார்த்தபோது கப்போர்ட் கதவு திறந்து கிடந்தது. பின்புற வாசல் கதவும் திறந்து கிடந்தது. உடன் குடும்பத்தாரை அழைத்து, கப்போர்டில் பார்த்ததில் அதில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த 45.5 பவுன் நகைகளும், 50 ஆயிரமும் திருடு போனது தெரிய வந்தது. பின்புற கதவை உடைத்து மர்மநபர்கள் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.