/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
6 மாதத்தில் 48 டன் பழைய உணவு எண்ணெய் சேகரிப்பு! வியாபாரிகள் மத்தியில் அதிகரிக்குது ஆர்வம்
/
6 மாதத்தில் 48 டன் பழைய உணவு எண்ணெய் சேகரிப்பு! வியாபாரிகள் மத்தியில் அதிகரிக்குது ஆர்வம்
6 மாதத்தில் 48 டன் பழைய உணவு எண்ணெய் சேகரிப்பு! வியாபாரிகள் மத்தியில் அதிகரிக்குது ஆர்வம்
6 மாதத்தில் 48 டன் பழைய உணவு எண்ணெய் சேகரிப்பு! வியாபாரிகள் மத்தியில் அதிகரிக்குது ஆர்வம்
ADDED : ஜூலை 25, 2024 11:58 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஓட்டல்களில் ஆறு மாதத்தில் மட்டும் 48 டன் பழைய உணவு எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது. பழைய எண்ணெய்யை பயன்படுத்துவதை குறைத்து உணவு பாதுகாப்புத்துறையில் கொடுப்பது அதிகரித்து வருகிறது. இருப்பினும் நகர்ப்புற கடைகளில் சிலவற்றில் போதிய விழிப்புணர்வு இல்லை.
கலெக்டர் தலைமையில் முன்பு நடந்த உணவு பாதுகாப்புத்துறையினரின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் உணவு எண்ணெய்யை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது என்றும், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை ருக்கோ என்ற அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ருக்கோ தனியார் அமைப்பு 1 கிலோ பழைய எண்ணெய்யை ரூ.30க்கு வாங்கி வட இந்தியாவில் நடக்கும் பயோ டீசல் உற்பத்திக்கு அனுப்பி வருகிறது.
மாவட்டம் முழுவதும் மாதந்தோறும் 250 முதல் 300 கிலோ வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 8 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் பழைய எண்ணெய் பெறப்பட்டு வருகிறது. 2024ல் ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் 48 டன் 397 கிலோ வரை பெறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை காட்டிலும் சேகரிக்கப்பட்ட எண்ணெய் அளவு அதிகரித்து வருவதற்கு ஓட்டல்கள், மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்பணர்வு காரணமாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் ஒப்படைத்து வருகின்றன. இருப்பினும் நகர்ப்புற கடைகளில் பரபரப்பாக இயங்கும் சிலவற்றில் போதிய விழிப்புணர்வு இல்லாத சூழல் உள்ளது. இதனால் பழைய எண்ணெய்யை மீண்டும் வடை போட பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜன் கூறியதாவது: பழைய எண்ணெய்யை மீண்டும் உணவுக்கு பயன்படுத்தவே கூடாது. மீறி பயன்படுத்தும் போது கெட்ட கொழுப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பழைய எண்ணெய்யை ஒப்படைக்காமல் மீண்டும் பயன்படுத்துவோருக்கு நோட்டீஸ் வழங்கப்படும், மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் வழக்கு போடப்படும், என்றார்.

