/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை
/
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை
ADDED : ஜன 29, 2025 01:34 AM
விருதுநகர்:அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முருகன் 38, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் ம.தி.மு.க., நிர்வாகி முருகன்.
இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். 2008 ஆக. 1 இரவு 7:00 மணிக்கு அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் உள்ள துணை மின் நிலையம் அருகே இறந்து கிடந்தார்.
இது முதலில் விபத்தாக பதிவு செய்யப்பட்டு அதன் பின் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதில் குற்றவாளிகள் கண்டறியப்படாததால் 2010ல் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் யோகவாசுதேவன் 62, சீனிவாச பெருமாள் 58, அழகுராமானுஜம் 37, பாண்டுரங்கன் 48, மதுரையைச் சேர்ந்த பாட்சா பாண்டி, பிரபு 45, கார்த்திக் 34, ஆகியோர் சேர்ந்து முருகனை கொலை செய்ததாக வழக்கு பதியப்பட்டது.
இது குறித்த விசாரணை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பாட்சா பாண்டி 2009 ஏப். 16ல் இறந்து விட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் சாட்சிகள் சரியானதாக இல்லை எனக்கூறி குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி டி.வி., ஹேமானந்தகுமார் தீர்ப்பளித்தார்.

