/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் கூட்டுறவு வங்கி மோசடியில் 6 பேருக்கு சிறை
/
சாத்துார் கூட்டுறவு வங்கி மோசடியில் 6 பேருக்கு சிறை
சாத்துார் கூட்டுறவு வங்கி மோசடியில் 6 பேருக்கு சிறை
சாத்துார் கூட்டுறவு வங்கி மோசடியில் 6 பேருக்கு சிறை
ADDED : அக் 26, 2024 06:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் தாய்கோ எனும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில், போலியான ஆவணங்களை உருவாக்கி, 46 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் வழங்கிய வழக்கில், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், கணக்கர், தலைமை ஆசிரியருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் மூன்று பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தும் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கடந்த 2001 முதல் 2004 வரை சாத்துார் தாய்கோ வங்கியில் தனிநபர் கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்ததில், போலியான ஆவணங்களை உருவாக்கி, 46 லட்சம் ரூபாய் வரை கடன்கள் வழங்கியது தெரிந்தது.
இதையடுத்து, வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, உதவியாளர் சாரதா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் முருகானந்தம், ஜோதி சுந்தரி உள்ளிட்ட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2008ல் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை நடந்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் இறந்து விட்டனர்.
இதில் வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, ஓய்வு தலைமை ஆசிரியை ஜோதி சுந்தரி ஆகியோருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 35,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மூன்று பேருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, தலா, 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு பேரை விடுதலை செய்து, நீதிபதி பிரித்தா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜகுமாரி ஆஜரானார்.