/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிதி பற்றாக்குறையால் கண்மாய்கள் பராமரிப்புக்கு சிக்கல்: தண்ணீர் வசதி இல்லாமல் குறைந்து வரும் விவசாயம்
/
நிதி பற்றாக்குறையால் கண்மாய்கள் பராமரிப்புக்கு சிக்கல்: தண்ணீர் வசதி இல்லாமல் குறைந்து வரும் விவசாயம்
நிதி பற்றாக்குறையால் கண்மாய்கள் பராமரிப்புக்கு சிக்கல்: தண்ணீர் வசதி இல்லாமல் குறைந்து வரும் விவசாயம்
நிதி பற்றாக்குறையால் கண்மாய்கள் பராமரிப்புக்கு சிக்கல்: தண்ணீர் வசதி இல்லாமல் குறைந்து வரும் விவசாயம்
ADDED : செப் 24, 2024 04:12 AM
விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் வைப்பார் வடிநிலம், குண்டாறு வடிநிலம் என பிரிக்கப்பட்டுள்ளது. வைப்பார் வடி நிலத்தின் கீழ் 264 கன்மாய்கள், ஆணை குட்டம், இருக்கங்குடி உட்பட 8 நீர் தேக்கங்களும் உள்ளன. குண்டாறு வடி நிலத்தின் கீழ் 117 கண்மாய்கள் உள்ளன. இவற்றை பராமரிக்க, ஷட்டர்கள் பழுது, வரத்து கால்வாய் சீரமைப்பு கரைகளில் முட் செடிகளை அப்புறப்படுத்தவது உட்பட பணிகளுக்கு அரசு ஒதுக்கும்.
பெரிய பணிகளுக்கு மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகித நிதியும் ஒதுக்கி கண்மாய்களில் பணி நடைபெறும். 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மாநில அரசும் போதுமான நிதியை வழங்காததால் கண்மாய்களின் பராமரிப்பு பணி கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டு செய்யப்படும் பராமரிப்பு பணியும் போதுமானதாக இல்லை.
இதனால் மழைக்காலங்களில் கண்மாய்களில் தண்ணீர் தேக்கி வைப்பது, தேங்கும் தண்ணீர் வெளியேறாத வகையில் பராமரிப்பது உட்பட பணிகளை செய்ய முடியாமல் நீர்வளத்துறை திணறுகிறது. மாவட்டத்தில் போதுமானதாக மழைப்பொழிவு இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு போனதாலும் விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்வது குறைந்து கொண்டே வருகிறது.
மேலும், கிருதுமால் நதிக்கு ஆண்டுதோறும் மழை காலத்தில் விரகனூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இது கடைக்கோடி கிராமங்களான திருச்சுழி நரிக்குடி வரை விவசாயிகளுக்கு பயன்படுவதுடன், 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் அரசு தண்ணீர் திறந்து விட நிலையான அரசு ஆணையை பிறப்பிக்காததால் தண்ணீர் இருந்தாலும் திறந்து விட முடியாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் கூறியதாவது: கடந்த ஆட்சியில் ஏராளமான கண்மாய்கள், கால்வாய்கள் கண்டறியப்பட்டு முழுமையாக மராமத்து பணி நடந்தது. தற்போதைய அரசு அதே நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
மத்திய அரசின் மீது பழி போட்டு மாநில அரசு தப்பித்துக் கொள்கிறது. இந்தாண்டு மழைக்காலம் துவங்கி விட்டது. முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. விவசாயமும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலப்பரப்பு சாகுபடி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக எந்தவித நடக்கவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.