/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிகளில் ஆதார் திருத்த முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு! மாணவர்கள் அலைக்கழிப்பை தவிர்க்க
/
பள்ளிகளில் ஆதார் திருத்த முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு! மாணவர்கள் அலைக்கழிப்பை தவிர்க்க
பள்ளிகளில் ஆதார் திருத்த முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு! மாணவர்கள் அலைக்கழிப்பை தவிர்க்க
பள்ளிகளில் ஆதார் திருத்த முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு! மாணவர்கள் அலைக்கழிப்பை தவிர்க்க
ADDED : நவ 30, 2024 05:55 AM

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் திருத்தத்திற்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க பள்ளிகளிலேயே முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது மத்திய அரசு சார்பில் திறனாய்வு தேர்வுகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இதற்கான உதவித்தொகைகள் மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதால் ஆதார் ஆவணங்கள் பெயர் சரியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக ஆதார் கார்டில் பெயருக்கு பின்னால் இன்ஷியல் வர வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
இதனால் மாணவர்கள் திருத்தம் செய்ய தாலுகா அலுவலங்கள், இசேவை மையங்கள், தபால் அலுவலகங்களுக்கு செல்கின்றனர். அங்கே சென்றால் அதே போல் பின்னால் பெயர் திருத்தம் செய்யப்பட்ட ஆவணம் கேட்கப்படுகிறது. ஆனால் மாணவர்கள் வாங்கிய ஜாதி சான்றிதழோ அல்லது வருமான சான்றிதழிலோ அவ்வாறு இருக்காத பட்சத்தில் நிராகரிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் ஜாதி, வருவாய் சான்றுகளிலும் மாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர். மாணவர்களாக இருப்பதால் ஜாதி சான்று எடுத்து ஆறு மாதம் கூட ஆகியிருக்காத சூழலில், அதில் மாற்றம் செய்ய வருவாய்த்துறையினரும் ஆறு மாதம் வரை காத்திருக்க அறிவுறுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட தடைகளை எல்லாம் மீறி ஆதார் பதிவு செய்ய வந்தால் குறிப்பிட்ட சில மையங்களிலே திருத்தம் செய்ய, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் உள்ளது.
அதே போல் ஆதார் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடப்பதால் அவ்வப்போது சர்வரும் முடங்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. தாலுகா அலுவலகங்களில் ஆதார் திருத்தத்திற்கு சென்றால், கலெக்டர் அலுவலகம் செல்ல அறிவுறுத்துகின்றனர்.
இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால் மாணவர்கள் விரக்தி அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் திருத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.