/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் தானியங்களை போடுவதால் விபத்து : கழிவுகளை எரிப்பதால் மரங்கள் பாதிப்பு
/
ரோட்டில் தானியங்களை போடுவதால் விபத்து : கழிவுகளை எரிப்பதால் மரங்கள் பாதிப்பு
ரோட்டில் தானியங்களை போடுவதால் விபத்து : கழிவுகளை எரிப்பதால் மரங்கள் பாதிப்பு
ரோட்டில் தானியங்களை போடுவதால் விபத்து : கழிவுகளை எரிப்பதால் மரங்கள் பாதிப்பு
ADDED : ஜன 01, 2024 05:06 AM

காரியாபட்டி: மாவட்டத்தில் விளைந்த பயிர்களில் இருந்து தானியங்களை பிரிக்க விவசாயிகள் ரோட்டில் போட்டு பிரிக்கின்றனர். அடிக்கடி வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. தானியக் கழிவுகளை ரோட்டில் போட்டுவிட்டு செல்வதால் டூவீலரில் செல்பவர்கள் இடறி விழும் அச்சம் உள்ளதால், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பெரும்பாலும் சோளம், எள், துவரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். முன், விளைந்த பயிர்களில் இருந்து தானியங்களை பிரிக்க, ஆங்காங்கே தற்காலிக களங்கள் தயார் செய்து, மாடுகளை கொண்டு மிதிக்க விட்டு தானியங்களை பிரிப்பர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கும் பாதுகாப்பானது. தானியங்களை சிந்தாமல் சிதறாமல் சேகரிக்க முடிந்தது.
மாடு வைத்திருந்தவர்களுக்கும் வருமானம் கிடைத்தது. காலப்போக்கில் அரசு சார்பாக ஆங்காங்கே சிமென்ட் களங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதிலும் மாடுகளைக் கொண்டு தானியங்களை பிரித்தனர். சிலர் டிராக்டர் கொண்டு பிரித்தனர். அதற்குப்பின் களங்களை சரிவர பராமரிக்கவில்லை. தற்போது களங்கள் இருக்கும் இடமே தெரியாமல் போயின. மாடுகளும் பெரும்பாலும் இல்லை. டிராக்டர் வைத்திருப்பவர்கள் களங்கள் தயார் செய்து தானியங்களை பிரித்தனர். பெரும்பாலான விவசாயிகள் கூலி கொடுக்க முடியாமல், முக்கிய, அதிக அளவில் வாகனங்கள் சென்றுவரும் ரோடுகளில் சோளம், எள், துவரை போன்ற தானியங்களைப் பிரிக்க ரோட்டில் போடுகின்றனர்.
வாகனங்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது. ஆர்வத்தில் விவசாயிகள் தானியங்களை மும்மரமாக பிரித்துக் கொண்டிருக்கும் போது வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்று பல இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் தானியங்களைப் பிரித்த பின் கழிவுகளை அப்படியே ரோட்டில் விட்டு விடுகின்றனர். குறிப்பாக சோளக் கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர். கவனிக்காமல் அதிவேகமாக டூவீலரில் வருபவர்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.
விபத்தை தவிர்க்க ரோட்டில் போட்டு தானியங்களை பிரிப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். அதற்கு அரசு தேவையான களங்களை உருவாக்கித் தர வேண்டும். சமீபத்தில் ஆங்காங்கே ரோட்டில் போடப்பட்டுள்ள தானிய கழிவுகளை விபத்திற்கு முன் அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.