/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிடி ஆயோக் புள்ளி விபரப்படி 13 துறைகளில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
/
நிடி ஆயோக் புள்ளி விபரப்படி 13 துறைகளில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
நிடி ஆயோக் புள்ளி விபரப்படி 13 துறைகளில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
நிடி ஆயோக் புள்ளி விபரப்படி 13 துறைகளில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
ADDED : அக் 02, 2024 07:00 AM

விருதுநகர் : 'வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் நிடி ஆயோக் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது', என விருதுநகரில் துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விருதுநகரில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கியும், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 923 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை காணொலி மூலம் துவக்கி வைத்தும் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மதுரையில் கடந்த பிப்ரவரியில் துவங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடியில் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. 18 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர். முதல்வர் விளையாட்டு கோப்பைக்கு இந்தாண்டு ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டு 36 வகையான விளையாட்டுகளில் 5 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கடந்தாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 6.71 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தாண்டு 11.56 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தாண்டு பரிசு தொகையை ரூ. 37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.5 கோடி பரிசு
வாள் வீச்சு விளையாட்டில் பல பதக்கங்களை வென்ற ஜிஷோ நிதி, தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். 38வது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழக அணியில் இடம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சுந்தரி இருவரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, ஸ்ரீநாத் நாராயணன், வைஷாலி ஆகியோர் சிறப்பான பங்களிப்பு கொடுத்தனர். இவர்களுக்கு ரூ. 90 லட்சம் ஊக்கத் தொகையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் சென்றனர். இவர்களுக்கு போட்டிக்கு செல்வதற்கு முன்பாக ஊக்கத்தொகையாக தலா ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.
இதில் பதக்கம் வென்ற 4 பேருக்கும் ரூ.5 கோடி பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் 1300 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.38 கோடிக்கும் மேல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களில் 100 பேருக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் முதல்கட்டமாக அரசுப்பணி வழங்கப்படவுள்ளது. ஜனவரியில் நடந்த இளையோருக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று முதல் முறையாக தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்தது.
13 துறைகளில் முதலிடம்
வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் நிடி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மத்திய அரசின் புள்ளியியல் துறை கொடுத்துள்ள புள்ளி விவரத்தில் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்டதும், அதிக வேலை வாய்ப்பு அளிப்பது தமிழகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, கலெக்டர் ஜெயசீலன் உள்பட பலர் பங்கேற்றனர்.