/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் உலா வரும் மனநலம் பாதித்தவர்கள் காப்பகத்தில் பாதுகாக்க நடவடிக்கை தேவை
/
சாத்துாரில் உலா வரும் மனநலம் பாதித்தவர்கள் காப்பகத்தில் பாதுகாக்க நடவடிக்கை தேவை
சாத்துாரில் உலா வரும் மனநலம் பாதித்தவர்கள் காப்பகத்தில் பாதுகாக்க நடவடிக்கை தேவை
சாத்துாரில் உலா வரும் மனநலம் பாதித்தவர்கள் காப்பகத்தில் பாதுகாக்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 16, 2025 07:50 AM
சாத்துார் : சாத்துாரில் ரோட்டில் உலா வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் விபத்துக்கள், பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்தித்து வருவதால் அவர்களை மனநல காப்பகத்தில் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாத்துார் மெயின்ரோடு, நான்கு வழிச்சாலை சந்திப்பு, நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு கோவில்பட்டி ரோடு பகுதியில் மனநலம் பாதித்த நிலையில் ஆண் மற்றும் பெண்கள் பலர் ரோட்டில் உலா வருகின்றனர்.
ஆடைகளை கிழித்துக்கொண்டு அரைகுறை ஆடையுடனும் உலாவரும் இவர்கள் சாத்துார் ஹோட்டல்களில் தரப்படும் உணவை வாங்கி உண்டு ரோட்டிலேயே வசித்து வருகின்றனர்.
பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு மற்றும் நான்கு வழிச்சாலை பகுதியிலும் இருளில் நடந்தபடியே உள்ளனர். சில சமயங்களில் நான்கு வழி சாலை ஓரத்தில் உள்ள டிவைடரில் படுத்து உறங்குகின்றனர்.
வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டு இவர்கள் அச்சப்படுவது கிடையாது.ஆனால் இருளில் நடந்து செல்லும் இவர்களை திடீரென பார்க்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயந்து நடுங்கி தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
மனநலம் பாதித்தவர்கள் திடீரென சாலையின் குறுக்கே கடக்க முற்படுகின்றனர் அப்பொழுது வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட வேண்டிய நிலை உள்ளது.
இதுபோன்ற சமயங்களில் பின்னால் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. மனநலம் பாதித்த நிலையில் உலா வரும் நபர்களை அவர்களின் உறவினர்கள் கண்டும் காணாமல் உள்ளதால் அவர்கள் ரோட்டில் உலா வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தருகின்றனர்.
கடந்த காலங்களில் போலீசார் ரோட்டில் உலா வந்த மனநலம் பாதித்தவர்களை இனம் கண்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளில் ஒப்படைத்தனர். சிலரை மன நல காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.
இதனால் சாத்துார் பகுதியில் மனநலம் பாதித்து உலா வந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது.
தற்போது மீண்டும் மனநலம் பாதித்து ரோட்டில் உலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மனநலம் காப்பகத்திலோ அல்லது அவர்களின் உறவினர்களிடமோ ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.