4 தொகுதிகளுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
4 தொகுதிகளுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 14, 2026 10:04 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் 4 சட்டசபை தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 2001 ஓட்டுசாவடிகளுக்கு ஏற்கனவே 2396 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2396 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2596 விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நோட்டா உள்பட 16 பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். தற்போது ராஜபாளையத்தில் 22 வேட்பாளர்கள், சாத்துாரில் 22 வேட்பாளர்கள், அருப்புக்கோட்டையில் 25 வேட்பாளர்கள், திருச்சுழியில் 23 வேட்பாளர்கள் என 4 தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதை கணக்கில் கொண்டு 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் சேர்த்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டது. ராஜபாளையத்தில் 322 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சாத்துாரில் 349 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அருப்புக்கோட்டையில் 324 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருச்சுழியில் 350 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 1345 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துணை சீரற்ற மயமாக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
