/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்தா கொடுக்கும் வளரிளம் பருவ தொழிலாளர்கள்
/
கல்தா கொடுக்கும் வளரிளம் பருவ தொழிலாளர்கள்
ADDED : செப் 25, 2024 03:15 AM
விருதுநகர் : தமிழகம் முழுவதும் இடைநின்ற, உயர்கல்விக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களை கண்டறிந்து படிக்க வைக்கும் உயர்வுக்கு படி என்ற திட்டத்தில் அலுவலர்கள் கண்டறியும் வளரிளம் பருவ தொழிலாளர்களை படிக்க வைப்பது பெரும்பாடாக உள்ளது என தொழிலாளர் நலத்துறையினர், குழந்தை பாதுகாப்பு துறையினர் புலம்புகின்றனர்.
படிப்பில் ஆர்வமின்றி இடைநின்று வேலைக்கு சென்றவர்கள், நல்ல மதிப்பெண் இருந்தும் பொருளாதார வசதியின்மை காரணமாக உயர்கல்வி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள், பெற்றோரை இழந்து அடுத்தகட்ட படிப்பிற்கு செல்ல முடியாமல் தவிப்போருக்கு உயர்வுக்கு படி என்ற திட்டம்
மூலம் பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, குழந்தை பாதுகாப்பு துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறை அலுவலர்கள் வீடுகள், தொழிற்சாலைகள், கடைகளுக்கு ஆய்வுக்கு செல்கின்றனர்.
இவர்கள் தவிர பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளும் அந்தந்த கிராமங்களில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களை கண்டறிகின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தில் நுாறு மாணவர்களை கண்டறிந்தால் இதில் 55 பேர் உயர்கல்விக்கு சென்று விடுகின்றனர்.
மீதம் 45 பேரில் 35 பேரை அலுவலர்கள் பல்வேறு அறிவுரைகளை கூறியும், எதிர்கால நலனுக்கு கல்வி அவசியம் குறித்து எடுத்து கூறியும் சேர்த்து விடுகின்றனர். ஆனால் மீதமுள்ள 10 பேரை உயர்கல்வியில் சேர்க்க சிரமம் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் 8 அல்லது 10ம் வகுப்பு முடித்து விட்டு வளரிளம் பருவ தொழிலாளர்களாக இருப்போர்.
நுாறு பேரில் 10 பேராவது வளரிளம் பருவ தொழிலாளர்களாக பிடிபடுகின்றனர். மாவட்டங்களுக்கு ஏற்ப இது மாறுபடுகிறது.
அரசு சார்பில் படிப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினாலும் படிப்பில் ஆர்வமில்லை என எளிதில் தட்டி கழிக்கின்றனர். இதனால் ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள் விழிபிதுங்குகின்றனர். கட்டாயப்படுத்தி படிக்க வைத்தாலும் ஓரிரு நாட்களில் ஓடி வந்து விடுகின்றனர். இவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.
குழந்தை பாதுகாப்பு துறையில் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இதை காட்டிலும் இன்னும் கூடுதலாக உளவியல் கவுன்சிலிங் தந்தால் மட்டுமே இவர்கள் இந்த மனப்பான்மையில் இருந்து வெளிவருவர். அது மட்டுமே தீர்வு என்கின்றனர் உளவியலாளர்கள்.