/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாதித்தபின் சமூக சேவை புரிவதே அறம் சார்ந்த தலைமைத்துவம் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி கருத்தரங்கில் தகவல்
/
சாதித்தபின் சமூக சேவை புரிவதே அறம் சார்ந்த தலைமைத்துவம் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி கருத்தரங்கில் தகவல்
சாதித்தபின் சமூக சேவை புரிவதே அறம் சார்ந்த தலைமைத்துவம் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி கருத்தரங்கில் தகவல்
சாதித்தபின் சமூக சேவை புரிவதே அறம் சார்ந்த தலைமைத்துவம் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி கருத்தரங்கில் தகவல்
ADDED : டிச 14, 2025 05:59 AM

மதுரை: 'எத்துறையாக இருந்தாலும் அதில் சாதித்தபின் சமூக சேவைகளில் ஈடுபட்டு பிறருக்கு வழிகாட்டியாக திகழ்வதே அறம் சார்ந்த தலைமைத்துவம்' என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில், பெங்களூரு குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத் தலைவர் ராம் பிரசாத் மனோகர் பேசினார்.
அவர் பேசியதாவது: பலருக்கும் ஆசைகள், கனவுகள் உண்டு. அது நிறைவேறாமல் போனால் இன்றைய தலைமுறையினர் துவண்டு விடுகின்றனர். 'இன்ஸ்டா' உலகில் 'இன்ஸ்டன்ட் சக்சஸ்' வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் எதிர்ப்பார்ப்பு, ஏமாற்றங்களால் நொறுங்கி விடுகின்றனர். கனவு சுயநலம் சார்ந்தது. லட்சியம் பொது நலம் சார்ந்தது. லட்சியத்தை அடையும் முயற்சியில் தோல்வி ஏற்படலாம். ஆனால் முயற்சிப்பதில் தோல்வி கூடாது. லட்சியம் நிறைவேற சந்தோஷங்களை தியாகம் செய்ய வேண்டும். அதனை அடைவதில் பிடிவாதம் வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் வேண்டும். அதற்கான முயற்சியில் தோல்வி ஏற்பட்டாலும் மனம் தளராமல் விடாது முயற்சிக்க வேண்டும்.
இன்றைய சமூக வலைதள உலகில் நமக்கு எது தேவை என்பதைக்கூட நம் மனதால் தீர்மானிக்க முடியவில்லை. அவை நம் நேரத்தை திருடுபவை. தினமும் ஒரு மணி நேரம் லட்சியத்திற்காக செலவிட வேண்டும். கல்லுாரிப் பருவத்திலேயே ஒத்த குறிக்கோள் கொண்டவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினர் நினைப்பதை அடைய முடியாமல் தடுப்பது, அவர்களுக்குள் உள்ள தயக்கம். எத்துறையில் சாதிக்க வேண்டுமோ அத்துறை சார்ந்த புத்தகங்கள் படித்து, அடிப்படை புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே வெற்றிக்கான முதல்படி.
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சாதித்தபின் தன்னால் முடிந்த சமூக சேவைகளில் ஈடுபட்டு பிறருக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும். பொறுப்பு, கடமையை உணர்ந்து, கண்ணியம் தவறாமல் செயல்பட வேண்டும். அதுவே அறம் சார்ந்த தலைமைத்துவம். இவ்வாறு பேசினார்.
கல்லுாரி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

