/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலை நேரங்களிலே பார்களில் மது விற்பனை
/
காலை நேரங்களிலே பார்களில் மது விற்பனை
ADDED : ஏப் 11, 2025 04:28 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில், பார்களில் விடிய விடிய மது விற்பனை தொடர்வதோடு, காலை நேரங்களிலும் விற்பனை நடக்கிறது. அதே போல் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மது கேட்டு வந்தாலும், தயங்காமல் வழங்குவதை சில விற்பனையாளர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதை தடுக்க மதுவிலக்கு போலீசாரின் சோதனையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் 182 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மனமகிழ் மன்றங்கள், ஓட்டல் பார்கள் 75 வரை அமைந்துள்ளன. இவற்றில் அரசு டாஸ்மாக் கடை மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும், எப்.எல். 2 எனப்படும் மனமகிழ்மன்றங்கள் காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையும், எப்.எல்.3., எனப்படும் ஓட்டல் பார்கள் காலை 11:00 மணி முதல் இரவு 12:00 மணி வரையும் இயங்க வேண்டும். குறிப்பிட்ட இந்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் மது விற்றால் ஆயத்தீர்வை போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்ற நடவடிக்கைகளை தடுப்பர்.
ஆனால் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார் உள்ளட்ட பகுதிகளில் உள்ள சில கடைகளில் இரவு நேரங்களிலும் பார்கள், கடைகள் மறைமுகமாக இயங்குகின்றன. இதனால் விடியவிடிய எந்த நேரமானாலும் மது கிடைக்கும் என்ற நிலையால் கூலித் தொழிலாளிகளின் உடல்நிலை பாதிப்பதோடு அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதே போல் காலை எழுந்ததும் குடிப்பவர்கள் சிலரின் வசதிக்கு ஏற்ப காலை 6:00 மணி முதலே பார்களில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்கின்றனர்.
மேலும் இதனால் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் பார் உரிமையாளர்கள் இதற்கென தனியாக பணியாட்களை நியமித்து மது வகைகளை பதுக்கி விற்கின்றனர். மனமகிழ்மன்றங்கள், ஓட்டல் பார்களிலும் மது மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
பிளஸ் 2 முடித்த சிறுவர்கள் சிலர் நண்பர்களின் ஆசை துாண்டுதல் காரணமாக மது வாங்குவதும் அதிகரித்து வருகிறது. அவர்கள் சிறுவர்கள் என தெரிந்தும் விற்பனையாளர்கள் எந்த வித தயக்கம் காட்டாமல் விற்கின்றனர். கடந்த 3 நாட்களாக திருவிழாக்கள் நடந்த நிலையில் அனைத்து பார்களிலும் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறின. எனவே மாவட்ட நிர்வாகம் மது விற்பனையில் தொடரும் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

