/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம், ரோடு, வாறுகால் இல்லை அவதியில் அம்பேத்கர் காலனி மக்கள்
/
செயல்படாத சுகாதார வளாகம், ரோடு, வாறுகால் இல்லை அவதியில் அம்பேத்கர் காலனி மக்கள்
செயல்படாத சுகாதார வளாகம், ரோடு, வாறுகால் இல்லை அவதியில் அம்பேத்கர் காலனி மக்கள்
செயல்படாத சுகாதார வளாகம், ரோடு, வாறுகால் இல்லை அவதியில் அம்பேத்கர் காலனி மக்கள்
ADDED : மே 02, 2025 05:55 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அம்பேத்கர் காலனியில் கட்டியும் பயன்படாத சுகாதார வளாகம், குடிநீர் பிரச்னை போன்ற சிக்கல்களால் அப்பகுதியினர் தவித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை செம்பட்டி அம்பேத்கர் காலனியில் 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. காலனி உருவாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என மக்கள் புலம்புகின்றனர். பாலையம்பட்டி அருகே மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் இந்த காலனி அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் இருந்து காலனிக்கு வர முறையான பாதை வசதி இல்லை.
மழை காலமானால் மழை வெள்ளம் தேங்கி காலனிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மழைக்காலத்தில் காலனி தீவு போல் காட்சி அளிக்கிறது. தெரு விளக்குகளும் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் வர சிரமப்படுகின்றனர். தெருக்களில் சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி தரமற்ற முறையில் ரோடு அமைத்ததால் கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. வாறுகால் வசதியும் இல்லை. கழிவுநீர் தெருக்களில் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
காலனியில் 2023ல், பொது சுகாதார வளாகம் ரூ.7.50 லட்சம் செலவில் கட்டினர். இதில் செப்டிக் டேங்க் முறையாக அமைக்காததால் கழிவுநீர் வெளியேறி கழிப்பறை அருகில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தற்போது சுகாதார வளாகம் முடங்கி கிடக்கிறது.
ஊராட்சி மூலம் ஒரே ஒரு குடிநீர் தொட்டி, ஒரு பொது குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதனால் தண்ணீர் பிடிக்க மக்கள் சிரமப்படுகின்றனர். காலனியில் போர்வெல் போட்டு மேல்நிலைத் தொட்டி கட்டி குடிநீர் வழங்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு நவீன சுகாதார வளாகம் குளியலறை சமுதாயக்கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
கட்டியும் பயனில்லை
மலையம்மாள், குடும்பதலைவி: 30 ஆண்டுகளாக எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஊராட்சி மூலம் கட்டியுள்ள கழிப்பறையும் பயன்படுத்த முடியவில்லை. சுகாதா வளாகத்தின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க் புதியதாக கட்டி கழிவு நீர் வெளியேற வழி செய்தால் தான் கழிப்பறையை பயன்படுத்த முடியும்.
நடையாய் நடக்குறோம்
சூரியா, தனியார் ஊழியர்: அம்பேத்கர் காலனியில் இருந்து வெளியூருக்கு செல்ல 3 கி.மீ., நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. எங்கள் பகுதியை குழந்தைகள் நடந்து சென்று தான் பள்ளி செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள் மருத்துவமனைக்கு நடந்து தான் செல்ல நிலை உள்ளது.
தண்ணீர் வேண்டும்
மாடத்தி, குடும்பதலைவி: தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஊராட்சி மூலம் 5 தெருக்களுக்கு ஒரே ஒரு பொது குழாய் அமைத்துள்ளனர். இதில் தண்ணீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.