/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஸ் வாகன வடிவமைப்பு அதிகரிப்பு
/
ரேஸ் வாகன வடிவமைப்பு அதிகரிப்பு
ADDED : ஜன 02, 2024 04:59 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேஸ் வாகன வடிவமைப்பு, மோடிபிகேஷன் செய்யும் இளசுகளால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் பதறுகின்றனர்.
மோட்டார் வாகன விதி படி வாங்கிய டூவீலர், காரை சுயமாக வடிவமைக்க கூடாது. அதில் உயர்ந்த சி.சி., இன்ஜின் பொறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் செய்ய கூடாது. வாகனத்திற்கு நிறம் மாற்ற மோட்டார் வாகன ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். இத்தகைய விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ரேஸ் பைக் போல் வாகனங்களை வடிவமைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இது போல் வாகன வடிவமைப்பு செய்வது சட்டபடி குற்றம்.
விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்கள் செல்கின்றன. இவற்றில் ரேஸ் வாகனங்கள் போல் பறக்கும் வாகனங்கள் அதிகம் உள்ளன. மேலும் சினிமா ஈர்ப்பாலும் இது போல தங்கள் டூவீலரையும் மாற்றி கொள்கின்றனர்.
சென்னையில் இது போல பைக், கார் ரேசில் ஈடுபடுவோருக்கு அதற்கு ஏற்ப வாகனங்களை வடிவமைத்து தரும் மெக்கானிக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர். விருதுநகரில் இது போன்ற மெக்கானிக்குகள் மிக குறைவு. மதுரை, திருச்சி, கோயம்புத்துார் மாவட்டங்களுக்கு சென்று சிலர் வாகன வடிவமைப்பு செய்து வருகின்றனர்.
அதிகமான வாகனங்கள், பைக் ரேசுக்கு வடிமைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இது போன்ற வாகனங்களை வடிவமைத்து தரும் மெக்கானிக்குகள் குறித்து போலீசார் கணக்கெடுப்பில் ஈடுபட வேண்டும். அவர்களின் கடைகளுக்கு நேரடியாக சென்று பைக் ரேஸ் விபரீதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நகரின் டிராபிக் போலீசாரும் பைக் ரேசில் ஈடுபடுவோர் குறித்த விபரங்களை சேகரித்து அபராதம் விதிப்பதோடு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

