/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடரும் திருட்டுகள் அலறும் அருப்புக்கோட்டை
/
தொடரும் திருட்டுகள் அலறும் அருப்புக்கோட்டை
ADDED : ஆக 16, 2025 11:56 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் நகரமும், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 5 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இது தவிர 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக நகர், புறநகர் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. புதிய பஸ் ஸ்டாண்ட் அகம்படியர் மஹால் சந்திப்புகளில் பஸ்கள் ஏறும் பெண்களிடம் செயின் , பர்ஸ் திருடுவது அடிக்கடி நடக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு இ.பி., காலனியில் பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை ,வெள்ளி பொருட்கள் திருடு போனது. மூன்று நாட்களுக்கு முன்பு அகம்படியர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏற நின்று கொண்டு இருந்த ஒரு பெண்ணின் கட்டை பையிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது.
நேற்று முன்தினம் ரயில்வே பீடர் ரோட்டில் பூட்டிய வீட்டிற்கு புகுந்து 7 பவுன் நகை திருடு போனது. இதுபோன்று டூவீலர்கள் திருட்டுகளும் அதிகம் நடக்கின்றது. பாலவநத்தம் பகுதியில் இருக்கன்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 3 முறை இது போன்ற கொள்ளை முயற்சி நடந்துள்ளது. தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்ல தயங்குகின்றனர்.
அருப்புக்கோட்டை டவுன் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு நகர், புறநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி., கேமராக்கள் வசதிகள் இருந்தும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. நகரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு செல்கிறது அதற்கு ஏற்றவாறு கூடுதலான போலீசார்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.