ADDED : நவ 09, 2024 06:17 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் அதிகளவில் நடைபெறும் பூ சாகுபடியால் இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் தேர்தல் தோறும் வாக்குறுதியளிக்கும் கட்சிகள் அதன் பிறகு அவற்றை கண்டுகொள்ளமால் இருந்து வருகிறது.
அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மல்லிகை பூ விவசாயம் பாரம்பரியமாக நடக்கிறது. பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து விவசாயிகள் மல்லிகைப்பூ சாகுபடி செய்கின்றனர். போதுமான தண்ணீர் வசதி, வேளாண் தொழில்நுட்பங்கள், மானியங்கள் விவசாயிகளுக்கு கிடைக்காததால் மல்லிகை பூ விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. அருப்புக்கோட்டை பகுதியில் விளையும் மனம் மிகுந்த மல்லிகை பூக்கள் தான் மதுரை மல்லி என அழைக்கப்படுகிறது. சீசன் நேரங்களில் அதிக விளைச்சல் உள்ள மல்லிகைக்கு உரிய விலை கிடைப்பது இல்லை.
மல்லிகையைத் தவிர, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செண்டு பூ உள்ளிட்ட பூக்கள் அதிகம் விலைகிறது. இதனால், அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் அரசு ஒரு சென்ட் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. இதுவும் தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கிறது.
தற்போதய அரசாவது பூவிவசாயகளுக்கு உதவ இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெசவாளர் பூங்கா அவசியம்
அருப்புக்கோட்டை நெசவுத் தொழிலுக்கும், மல்லிகை பூக்களுக்கும் புகழ் பெற்றது. இரண்டையும் பாரம்பரியமாக நெசவாளர்கள், விவசாயிகள் செய்து வருகின்றனர். அருப்புக்கோட்டையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் நெசவு தொழில் செய்து வருகின்றனர். முன்பு கைத்தறியில் நெய்து வந்தவர்கள் காலப்போக்கில் விசைத்தறிக்கு மாறி விட்டனர். இங்கு நெய்யப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அருப்புக்கோட்டையில் தான் வாழைநாறில் தயாரிக்கப்படும் சேலைகள் நெய்யப்படுகின்றன.
நெசவுத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும் , அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர் பூங்கா அமைக்க வேண்டும் என்பதும், கைத்தறி துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நெசவாளர்களுக்கு அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என்பதும், தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கைகள்.
தேர்தல் நேரங்களில் மட்டும் இந்த கோரிக்கைகள் வாக்குறுதிகளாக மட்டுமே மாறுகின்றன. ஆட்சி அமைத்த பின், வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கின்றன.