/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடுதிகளின் ஆய்வு குழுக்களை செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
விடுதிகளின் ஆய்வு குழுக்களை செயல்படுத்த எதிர்பார்ப்பு
விடுதிகளின் ஆய்வு குழுக்களை செயல்படுத்த எதிர்பார்ப்பு
விடுதிகளின் ஆய்வு குழுக்களை செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஆக 08, 2024 04:12 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல அரசு விடுதிகளின் கட்டடங்கள் 20 ஆண்டுகள் தாண்டி உள்ளதால் அவை சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றை பராமரித்து புனரமைப்பதுடன் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா என ஆய்வு நடத்தி அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்களை முழுவீச்சில் செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 47 பிற்படுத்தப்பட்டோர், 56 ஆதிதிராவிடர் நல விடுதிகள் உள்ளன. இவற்றில் முன்பு அதிகளவில் மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது குறைந்த எண்ணிக்கையில் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளும், ஆங்காங்கே கல்லுாரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. இதனால் ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், கையேடுகள், 3 வேளை உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. இங்கேயே தங்கி தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை போன்ற முக்கிய விடுமுறைகளுக்கு மட்டும் மாணவர் வீட்டுக்கு அனுப்பப்படுவர். ஆனால் தற்போது சனி, ஞாயிறும் அனுப்பப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்தளவுக்கு விடுதிகளின் பராமரிப்பு குறைந்து விட்டது.
மேலும் வார்டன் நிலையில் ஒரு ஆசிரியர் எப்போதும் இங்கு இருப்பர். ஆனால் விடுதகளில் சமையலர் ஆசிரியராகவும், ஆசிரியர் சமையலராகவும், காவலாளி பணியிடங்கள் காலியாகவும் உள்ளன. ஒரு விடுதிக்கு ஒரு மாதத்திற்கு வழங்கும் பராமரிப்பு படியானது மிக குறைவாக உள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் இந்த விடுதிகளுக்கென தாலுகா வாரியாக தாசில்தார்கள் தலைமையில் குழு நிர்ணயித்தது. அந்த குழுக்கள் தற்போது என்ன ஆனது என தெரியவில்லை. துவக்கத்தில் ஆய்வு நடத்தி விடுதி மாணவர்களோடு உணவு அருந்ததியதோடு சரி. தற்போது பெரிய அளவில் ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
பல விடுதிகள் சேதமடைந்தும், மாணவர்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கின்றி உள்ளன. சுவிட்சுகள், தரைத்தளங்கள் சேதமடைந்துள்ளன. ஊரகப்பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி நலனை அடிப்படையாக கொண்டு தான் இந்த விடுதிகள் துவங்கப்பட்டன. தற்போது இவை பெயரளவிலே இயங்குவது மாணவர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருவது வேதனைக்குரியது. எனவே மாவட்ட நிர்வாகம் நியமித்த குழுக்களை மாதந்தோறும் ஆய்வு நடத்தவும், விடுதிகளுக்கு தேவையான வசதிகளை அரசிடம் பெறவும், கூடுதல் பணியிடங்களை நிரப்பி விடுதிகளை முழுவீச்சில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.