/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூட்டிக்கிடந்த போலீஸ் அவுட் போஸ்ட் புதுப்பிப்பு
/
பூட்டிக்கிடந்த போலீஸ் அவுட் போஸ்ட் புதுப்பிப்பு
ADDED : ஜூலை 27, 2025 03:49 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலுார் விலக்கில் பராமரிப்பு இன்றி போலீஸ் அவுட் போஸ்ட் பல மாதங்களாக பூட்டிக்கிடந்தது. தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து, மின் விளக்குகள் பொருத்தி சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவுட் போஸ்ட் மீண்டும் பூட்டப்படாமல் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் ஆமத்துார் போலீஸ் எல்கைக்குட்பட்ட மீசலுார் விலக்கில் நீலநிறத்தில் தகரத்தால் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்பட்டது. விருதுநகர் போலீஸ் உட்கோட்டத்தில் ஆமத்துார் போலீஸ் ஸ்டேஷன் மட்டும் எஸ்.ஐ., ஸ்டேஷனாக இருப்பதால் போலீசார் 25 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இந்த ஸ்டேஷன் அதிக எல்கையை கொண்டிருந்தாலும் தற்போது வரை குறைவான எண்ணிக்கையில் போலீசார் பணிபுரிகின்றனர். இதனால் முக்கியஸ்தர்கள் வருகை, பட்டாசு வெடி விபத்து, திருவிழா, அரசியல் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் செல்ல வேண்டி இருப்பதால் ஸ்டேஷன், ரோந்து பணியில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால் மீசலுார் விலக்கு அவுட் போஸ்ட் தொடர்ந்து செயல்படாமல் பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. இதில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள், சி.சி.டி.வி., கேமரா ஆகியவை முறையான பராமரிப்பு இன்றி பாழானது. சி.சி.டி.வி., பழுதால் சிவகாசி ரோட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விபத்துக்கள், ரேஷன் அரிசி கடத்தல், டூவீலர் திருட்டு, செயின் பறிப்பு உள்பட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.
தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் அவுட் போஸ்ட் புதிதாக சிவப்பு நிற பெயிண்ட், மின் விளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது. அவுட் போஸ்ட் சுற்றியிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டது.
ஆனால் புதுப்பிப்பு பணிகள் செய்வதோடு மட்டும் முடிந்து விடாமல் போலீஸ் அவுட் போஸ்ட் தொடர்ந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து மீண்டும் பூட்டி கிடக்கும் நிலைக்கு செல்லாமல் இருக்க போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து, அவுட் போஸ்ட் தொடர்ந்து செயல்பட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.