/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் குவியும் பறவைகள்
/
திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் குவியும் பறவைகள்
ADDED : நவ 17, 2024 05:30 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் அதிக அளவிலான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. எனவே இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் ஆண்டுதோறும் செப்., அக்., நவ., மாதங்களில் செங்கால் நாரை உள்ளிட்ட பறவைகள் உணவிற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருகின்றன.
இவைகளில் பெரும்பான்மையான பறவைகள் இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் தாங்கள் வந்த இடத்திற்கு திரும்பி விடும். ஒரு சில பறவைகள் இங்கேயே தங்கிவிடும். தற்போது செங்குளம் கண்மாய் துார்வாரப்பட்டு வருகின்றது.
தற்போது சின்ன கொக்கு அல்லது சிறு வெண் கொக்கு என அழைக்கப்படும் உள்ளூர் பறவைகள் முதல் ஐரோப்பா, தெற்கு ஆசியா பகுதிகளில் வசிக்கின்ற நண்டுண்ணி உள்ளான், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சாம்பல் நாரை, உள்பட உள்பட பல்வேறு பறவைகள் இங்கு வந்துள்ளன.
நண்டுண்ணி உள்ளான் (பிளாக் விங்டு ஸ்டில்ட்): இவ்வகை பறவைகள் ஓமன், ஈரான், சவுதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் கடல் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும். இந்தப் பறவை தற்போது செங்குளம் கண்மாயிலும் உள்ளது.
சிவப்பு மூக்கு ஆள்காட்டி (ரெட் வேட்டில்டு லேப் விங்): மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலி எழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும் இந்த வகை பறவைகள் ஈரான் தென்மேற்கு ஈரான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்திய துணைக்கண்டம் பகுதிகளிலும் தமிழகத்திலும் காணப்படுகின்றது.
செங்காகம் (கிரேட்டர் கூகல்): இந்தியா, இலங்கை முதல் கிழக்கு மற்றும் தென் சீனா இந்தோனேஷியா வரையிலுமான இடைப்பட்ட பகுதியில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன. இந்த வகை பறவைகளும் இங்கு வந்துள்ளன.
சாம்பல் நாரை (கிரே ஹெரான்): ஐரோப்பா, ஆசியா ஆப்ரிக்காவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட நீண்ட கால்கள் கொண்ட ஒரு பறவை. சதுப்பு நிலப் பகுதிகளில் வாழும் இப்ப பறவையும் இங்கும் வந்துள்ளது.
இது போன்று ஏராளமான பறவைகள் திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் பரவலாக காணப்படுகின்றது. தவிர சிவகாசி பெரியகுளம் கண்மாய் திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயிலும் ஏராளமான பறவைகள் உள்ளன. எனவே திருத்தங்கள் செங்குளம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என பறவை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.