/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ., -காங்கிரஸ் வாக்குவாதம்
/
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ., -காங்கிரஸ் வாக்குவாதம்
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ., -காங்கிரஸ் வாக்குவாதம்
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ., -காங்கிரஸ் வாக்குவாதம்
ADDED : மார் 19, 2025 06:39 AM

சிவகாசி, : சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ., காங்கிரஸ் கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பா.ஜ., கவுன்சிலர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்றனர்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் பா.ஜ.,வை சேர்ந்த குமரிபாஸ்கர் எழுந்து, கடந்த இரு கூட்டங்களாக தேசிய கீதம் பாடாமல் கூட்டத்தை முடித்தது குறித்து கேள்வி எழுப்பியவர், தேசிய கீதத்தை அவமதித்த மேயரை வன்மையாக கண்டிக்கிறோம் என அச்சிடப்பட்ட பேப்பரை கையில் துாக்கி பிடித்தார்.
அப்போது அருகே அமர்ந்திருந்த காங்கிரசை சேர்ந்த ரவிசங்கர் எதிர்ப்பு தெரிவித்து அவர் வைத்திருந்த பேப்பரை பிடுங்கி கிழித்து எறிந்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் ஒருமையில் பேசி கைகலப்பு ஏற்படும் படி சென்றதால் போலீசார், சக கவுன்சிலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
ரவிசங்கருக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசியதால், ஒற்றை கவுன்சிலராக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என குமரிபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
கூட்டம் முடிந்ததும் அரங்கை விட்டு வெளியேறிய குமரி பாஸ்கரை காங்கிரஸ் நிர்வாகிகள், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பின் தொடர்ந்து சென்று, கவுன்சிலரை எப்படி தாக்க முயலலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குமரி பாஸ்கரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று அவரது டூவீலரில் ஏற்றி அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டூவீலரின் பின்னால் இருந்த குமரிபாஸ்கரை சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குமரி பாஸ்கர் தன்னை தாக்கியதாக காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் மீது சிவகாசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் சார்பில் குமரிபாஸ்கர் மீது புகார் அளிக்கப்பட்டது.