/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கந்தகபூமி சிவகாசியில் படகு சவாரி; மக்கள் உற்சாகம்
/
கந்தகபூமி சிவகாசியில் படகு சவாரி; மக்கள் உற்சாகம்
ADDED : மார் 18, 2024 12:00 AM

சிவகாசி, : சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி துவக்கி வைக்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய் தொடர் மழை காரணமாக நிரம்பியது. தன்னார்வலர்கள் சார்பில் பெரியகுளம் கண்மாயை துார்வாரி, கரைகளை உயர்த்தி சீரமைத்து, கண்மாய் நடுப்பகுதியில் மியாவாக்கி காடு அமைக்கப்பட்டது.
பல ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளம் கண்மாய் நிரம்பியிருப்பதால், விடுமுறை நாட்களில் கண்மாயில் படகு சவாரி விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்புத்துறை அனுமதியுடன், படகு சவாரி துவங்கப்பட்டது.
அசோகன் எம்.எல்.ஏ., படகு சவாரியை துவக்கி வைத்தார். பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, மக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் படகு சவாரி தொடர்ந்து நடைபெறும் என் அதிகாரிகள் கூறினர்.
தொழில் நகரான சிவகாசியில் மக்கள் பொழுது போக்குவதற்கான இடங்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இருப்பதைப் போல, கந்தகபூமியான சிவகாசி கண்மாயில், படகு சவாரி தொடங்கியிருப்பது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

