/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைக்காலத்தில் துவங்கிய பாலப்பணிகள் நகரை அல்லல்படுத்திய மாற்றுப்பாதைகள்
/
மழைக்காலத்தில் துவங்கிய பாலப்பணிகள் நகரை அல்லல்படுத்திய மாற்றுப்பாதைகள்
மழைக்காலத்தில் துவங்கிய பாலப்பணிகள் நகரை அல்லல்படுத்திய மாற்றுப்பாதைகள்
மழைக்காலத்தில் துவங்கிய பாலப்பணிகள் நகரை அல்லல்படுத்திய மாற்றுப்பாதைகள்
ADDED : டிச 10, 2025 09:18 AM

விருதுநகர்: விருதுநகரின் நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரே நேரங்களில் செய்யப்பட்ட பால பணிகளால் நகரின் போக்குவரத்துக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
விருதுநகரில் வடகிழக்கு பருவமழை அக். 17 முதல் துவங்கியது. அதுவரை நகராட்சி பகுதிகளில் கவுசிகா நதியை துார்வாரும் பணி தான் மும்முரமாக நடந்து வந்தது. மழை பெய்ய துவங்கிய நேரத்தில் தான் நகரின் சர்ச் பகுதி, கச்சேரி ரோடு, மணிக்கூண்டு, எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து சிவகாசி செல்லும் ரோடு என நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.75 கோடிக்கு வடிகாலின் தரைப்பால பணிகளும், நகராட்சி நிர்வாகம் சார்பில் மெயின் பஜார், தர்க்காஸ் தெரு பகுதிகளிலும் தரைப்பால பணிகளும் நடந்து வருகின்றன.
மழைக்காலத்தில் துவங்கிய இந்த பாலப்பணிகள் மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியது. நல்ல நிலையில் இருந்த ரோடுகள் பெயர்க்கப்பட்டு பாலப்பணிகள் நடந்து வருகிறது.
வடிகாலின் தரைப்பாலங்கள் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையே மழை பெய்தால் ரோடுகளில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதற்காக தான். ஆனால் நிறைய வடிகால்கள் புதர்மண்டியும், கழிவுநீர் சூழ்ந்தும், மதுபாட்டில்களாலும் மோசமான நிலையில் உள்ளன. பாலங்கள் அமைக்கப்பட்டாலும், வடிகால்கள் முறையாக வடியும் திறன் கொண்டிருந்தால் தான் பயன்படும்.
நகராட்சி நிர்வாகம் எந்த வடிகால் பணிகளையும் சரி செய்யாமல் உள்ளது. துார்வாரவே செய்யாமல், அனைத்தும் மண்மேவி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் நீரானது ரோட்டில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இப்படிப்பட்ட அலட்சியமான சூழலில் தான் இந்த பாலப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலப்பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட மாற்றுப்பாதைகளிலும் ரோடு சரியில்லை. மதுரை ரோடு சர்ச் முன் பகுதியில் இருபுறமும் பணிகள் நடந்துள்ளது. பாலத்திற்காக தோண்டியதால் ரோடுகளுக்கு பேட்ஜ் பணிகள் அவசியமாக உள்ளது. அதே போல் தர்க்காஸ் தெரு, மெயின் பஜார் பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றனர். சிவகாசி ரோட்டில் ஜல்லி கற்கள் பரவி வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது.
பால பணிகளை விரைந்து செய்ய வேண்டும். டிசம்பரில் வரும் நாட்களில் புயல் அறிகுறி தென்பட்டால் மழையை காரணம் காட்டி பேட்ஜ் ரோடு பணியை தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது.
தாமதமாக துவங்கிய இந்த பால பணிகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்தி விரைந்து பணிகளை முடித்து மக்களுக்கு தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

