/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் செலவில் பஸ் வசதி சிவகாசியில் 5 ஆண்டுகளாக தொடருது சேவை
/
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் செலவில் பஸ் வசதி சிவகாசியில் 5 ஆண்டுகளாக தொடருது சேவை
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் செலவில் பஸ் வசதி சிவகாசியில் 5 ஆண்டுகளாக தொடருது சேவை
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் செலவில் பஸ் வசதி சிவகாசியில் 5 ஆண்டுகளாக தொடருது சேவை
ADDED : நவ 15, 2025 04:49 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி ஏ. வி.டி., பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் செலவில் மாணவிகளுக்காக பஸ் வசதி செய்து ஐந்து ஆண்டுகளாக மாதம் ரூ. 25 ஆயிரம் கொடுத்து சேவை செய்து வருகின்றனர். இதனால் மாணவிகள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
சிவகாசி மாநகராட்சி ஏ.வி.டி., பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பாறைப்பட்டி, மீனம்பட்டி, சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து169 மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சிராணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போது இப்பள்ளியில் 100 மாணவிகள் படித்து வந்தனர். மாணவிகள் பள்ளிக்கு வருவதற்காக இரு பஸ்கள் மாறி வர வேண்டி இருந்தது. மேலும் பாதுகாப்பும் இல்லாததால் பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி தனது சக ஆசிரியர்களுடன் கலந்து பேசி , மாணவிகள் பாதுகாப்பாக பள்ளி வருவதற்காக தனியார் பஸ்சிற்கு கட்டணம் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதற்காக அனைத்து ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ரூ.25 ஆயிரம் வரை பஸ்சிற்கு கொடுக்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக இப்பணி தற்போது வரை தொடர்ந்து நடக்கிறது. தனியார் பஸ் மாணவிகளின் ஊருக்கே சென்று ஏற்றி பள்ளியில் இறக்கி மீண்டும் அவர்களது ஊரில் இறக்கி விடுகிறது. இதனால் மாணவிகள், பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தலைமையாசிரியர் ஜான்சி ராணி கூறியதாவது, சிவகாசி அருகே கிராமப் பகுதியில் இருந்து மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு இரண்டு பஸ்கள் மாறி வர வேண்டி உள்ளது. இதனால் பெரிதும் சிரமப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்காக எங்களது சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் மாணவிகள் அதிகரித்த நிலையில் தனியார் பஸ்சிற்கு ஏற்பாடு செய்தோம். இதற்காக பணிபுரியும் 14 ஆசிரியர்களும் சேர்ந்து ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்துகிறோம். இதனால் மாணவிகள் பாதுகாப்பாக வந்து செல்கின்றனர். பள்ளியில் 100 மாணவிகள் படித்து வந்த நிலையில் பஸ் ஏற்பாடு செய்த பின்னர் தற்போது 169 பேர் படிக்கின்றனர்.
பெற்றோர் கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் துாரம் என்றாலும் இரண்டு பஸ்கள் மாறி செல்ல வேண்டி இருந்தது. இதனால் பிள்ளைகள் பெரிதும் சிரமப்பட்டனர். ஆசிரியர்கள் சொந்த செலவில் பஸ் ஏற்பாடு செய்துள்ளதால் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

