/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு கிராமக்குழு தீர்மானம் தேவையில்லை; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : நவ 15, 2025 04:48 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு கிராமக்குழு தீர்மானம் பெறும் நடைமுறையை கைவிட வேண்டும் என வனத்துறை சார்பில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் முருகன் தலைமையில் நடந்தது. உதவி வன பாதுகாவலர் ஞானப்பழம் வரவேற்றார்.
வனச்சரகர்கள் செல்ல மணி, சரண்யா, ரவீந்திரன், பூவேந்தன், உயிரியலாளர் பார்த்திபன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சேத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருச்சுழி பகுதி விவசாயிகள் பேசுகையில், தற்போது தமிழக அரசின் அரசாணையின்படி காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு விவசாயிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதி வி.ஏ.ஓ., ஊராட்சி செயலர், வனவர், கிராம மக்கள் கொண்ட குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும், இந்த முறையை கைவிட்டு வனத்துறையே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அகழியை ஆழமாகவும், அகலமாகவும் வெட்டுதல், சேதமடைந்த பயிர்களுக்கு விரைவாக இழப்பீடுகள் வழங்குதல், கோவை மாவட்ட பகுதிகளில் உள்ளது போல் மின் வேலி அமைத்தல், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் ரிசார்ட்டுகள் கட்டுவதை தடுத்தல், மலையடிவார நீர்நிலைகளில் குடிமகன்கள், இளைஞர்கள் மது போதையில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதை தடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பினர்.
இ.கம்யூ., முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன் பேசுகையில், வருசநாடு மலை பாதைக்கு வனத்துறை அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அனைவரின் கேள்விகளுக்கும் துணை இயக்குனர் முருகன் பதில் அளித்தார்.