ADDED : நவ 12, 2024 04:35 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 2வது கரிசல் இலக்கியத் திருவிழா 2024 டிச. 14, 15 ஆகிய இரு நாட்களில் சிவகாசியில் நடக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரிசல் இலக்கிய கழகத்தின் மூலம் நடத்தப்படும் இத்திருவிழாவை முன்னிட்டு சிறந்த இளம் படைப்பாளர் விருது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விருதுக்கு சிறுகதைத் தொகுப்பு, நாவல், ஆய்வுக் கட்டுரை போன்ற படைப்புகளை அனுப்பலாம். படைப்பாளர்கள் 35 வயதுக்குட்பட்டவராகவும், படைப்புகள் வெளிவந்த காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கவும் வேண்டும். நவ. 30க்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.
கரிசல் நிலவியல், வாழ்வியல், பண்பாடு, வழக்காறுகள், தொழில்கள், சமூகங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளாக இருக்க வேண்டும். நியமிக்கப்பட்ட தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களுக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கப்படும். சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்படும் நூலுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும், என்றார்.