/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தரக்கோரி கலெக்டர் காரை மறித்தவர்கள் மீது வழக்கு
/
பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தரக்கோரி கலெக்டர் காரை மறித்தவர்கள் மீது வழக்கு
பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தரக்கோரி கலெக்டர் காரை மறித்தவர்கள் மீது வழக்கு
பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தரக்கோரி கலெக்டர் காரை மறித்தவர்கள் மீது வழக்கு
ADDED : டிச 20, 2025 05:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கீழக்கோட்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர கேட்டு நேற்று முன்தினம் அந்த கிராமத்திற்கு வந்த கலெக்டரின் காரை மறித்த கிராம மக்கள் 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கீழக்கோட்டையூரில் 1950 முதல் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வந்தது. 2018ல் இது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கூடுதல் கட்டடங்கள் இல்லாமல் சமுதாய கூடத்திலும், கிராம பொது சாவடியிலும், மரத்தடியிலும் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கூடுதல் கட்டடம் கட்டித் தர மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை கட்டித் தரப்படவில்லை.
இதனால் ஜூலை 3ல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித பணிகளும் நடக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் சுகபுத்ரா கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த நிலையில், தங்கள் பகுதியில் உள்ள பள்ளியை நேரில் வந்து பார்க்க வலியுறுத்தி அவரது காரை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக கோட்டையூர் வி.ஏ.ஓ. மாரிமுத்து புகாரில், கிராமத்தைச் சேர்ந்த சீலமுத்து, லட்சுமையா, வேல்சாமி, மகேந்திரன், காளிமுத்து ஆகியோர் மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

