/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சென்டர் மீடியன்
/
ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சென்டர் மீடியன்
ADDED : ஜன 18, 2024 05:23 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் சேதமடைந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சிவகாசி நகராட்சியாக உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து 2020ல் ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நுாற்றாண்டு நிதியில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்துதல், பூங்காக்கள் சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், ரோடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில் திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி நகராட்சி இணைந்து மாநகராட்சியாக 2021 அக். ல் தரம் உயர்த்தப்பட்டது. நுாற்றாண்டு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் நடைபெறவில்லை. தொடர்ந்து 2022 டிச. ல் புதிய அரசாணை வெளியிடப்பட்டு நூற்றாண்டு நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதியின் கீழ் சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து வெம்பக்கோட்டை ரோடு சந்திப்பு வரை, பி.கே.என்., ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டின் நடுவில் ரூ. 1 கோடியே 6 லட்சம் மதிப்பில் சென்டர் மீடியன் அமைத்து, 130 உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்தும் பணி நான்கு மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் ரோடுகள் மிகவும் குறுகிவிட்டது. தவிர இரு புறமும் ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் எந்த வாகனமும் எளிதில் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது
இந்நிலையில் ரோடுகளும் சேதமடைந்து இருப்பதாலும், ரோடு மிகவும் குறுகிய நிலையில் ரோட்டின் மேலே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்கவும், வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.