/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி மலையில் சுடச்சுட வடை விற்பனை அமோகம்! கேள்விக்குறியாகும் வன பாதுகாப்பு
/
சதுரகிரி மலையில் சுடச்சுட வடை விற்பனை அமோகம்! கேள்விக்குறியாகும் வன பாதுகாப்பு
சதுரகிரி மலையில் சுடச்சுட வடை விற்பனை அமோகம்! கேள்விக்குறியாகும் வன பாதுகாப்பு
சதுரகிரி மலையில் சுடச்சுட வடை விற்பனை அமோகம்! கேள்விக்குறியாகும் வன பாதுகாப்பு
ADDED : ஜூலை 19, 2024 06:24 AM
தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிகவும் கரடு முரடான பாதையும், எவ்வித அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இல்லாத மலைப்பகுதியாக சதுரகிரி சுந்தரம் மகாலிங்கம் கோயில் மலைப்பகுதி உள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம்.
கோயிலுக்கு மலை ஏறும் நுழைவு பகுதியான தாணிப்பாறையில் பக்தர்களிடம் எளிதில் தீ பற்றும் பொருட்கள் உள்ளதா என வனத்துறையினர் சோதனை செய்த பிறகே மலையேற அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் சங்கிலி பாறையை கடந்து கோயிலுக்கு செல்லும் அடர்ந்த வனப் பகுதியில் பல இடங்களில் விறகு அடுப்புகள் மற்றும் சிலிண்டர்களை பயன்படுத்தி சுடச்சுட வடைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதை பார்த்து கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முறையான ரோடு வசதியோ, எளிதில் மீட்பு பணியில் ஈடுபடும் வசதிகளோ, போதிய பாதுகாப்பு வசதிகளோ இல்லாத சதுரகிரி மலைப்பகுதியில் அடுப்புகளை பயன்படுத்தி வடைகள் தயாரித்து விற்பது வனப்பகுதியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேங்காய், பழம், பத்தி, சூடன் உட்பட பூஜை பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய கடைகள் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில் அடுப்புகளை பயன்படுத்தி வடைகள் தயாரிப்பது தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.
சில தனிநபர்களின் பண ஆசைக்காக வனத்தின் பாதுகாப்பிற்கு இதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை வனத்துறை சார்பில், கோயில் நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஏலம் விடப்பட்ட கடைகளில் பூஜை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். அதனை மீறி அடுப்புகளை பயன்படுத்தி வடைகள் தயாரித்து விற்பனை செய்ய கூடாது என ஏலம் எடுத்த கடைக்காரர்களை எச்சரித்துள்ளோம். மீறி செயல்பட்டால் ஏலம் எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.