/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகள் தோறும் முதல்வர் மருந்தகம்
/
ஊராட்சிகள் தோறும் முதல்வர் மருந்தகம்
ADDED : டிச 02, 2024 05:10 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தில் உள்ள ஊராட்சிகள் தோறும் அரசு சார்பில் முதல்வர் மருந்தகம் அமைத்து, கிராமப்புற மக்களுக்கு காலதாமதமின்றியும், வீண் அலைச்சலின்றியும் மருந்துகள் கிடைக்க தமிழக அரசு முன் வர வேண்டுமென டிப்ளமோ படித்த மருந்தாளுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகள், ஊராட்சிகளிலும் அதற்குட்பட்ட சேய் கிராமங்களிலும் கிடைக்காத நிலை உள்ளது.
இதனால் பெட்டி கடைகளில் தான் மருந்துகள் வாங்கும் நிலை உள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் பார்மசி கல்லுாரிகளில் டிப்ளமோ இன் பார்மசி படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்காமலும், நகர் பகுதியில் சொந்தமாக மருந்து கடைகள் வைக்க பொருளாதார வசதி இல்லாமலும் ஆயிரக்கணக்கான மருந்தாளுனர்கள், படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வீண் அலைச்சலின்றி மருந்துகள் கிடைக்கவும், மருந்தாளுனர்களுக்கு சுய வேலை வாய்ப்பு கிடைக்கவும், தமிழகத்தில் உள்ள ஊராட்சிகள் தோறும் அரசின் சார்பில் இடம், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி, முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இ-சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டு
எவ்வித பயன்பாடும் இல்லாமல் மூடிகிடக்கிறது. இந்த கட்டங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் தானாகவே மருந்து விற்பனை உரிமங்கள் வழங்கினால், மருந்தாளுனர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்ற முன்வருவர்.
பார்மசி கவுன்சில் பதிவு மூப்பின்படி விருப்பமுள்ள மருந்தாளுனர்களுக்கு அவர்கள் விரும்பும் கிராமங்களில் மருந்து கடைகள் துவக்கினால்,
இதுவரை அரசு பணி கிடைக்காமல் தவிக்கும் டிப்ளமோ படித்த மருந்தாளுனர்களுக்கும் சுயமாக தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.