/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் கைகலப்பு
/
கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் கைகலப்பு
ADDED : மார் 02, 2024 04:29 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே கல்குவாரி அமைக்க நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு தெரிவித்ததால் கைகலப்பு நடந்தது.
திருச்சுழி அருகே புலியூரான் கிராமத்தில் தனியார் நிறுவனம் கல்குவாரி அமைக்க விண்ணப்பித்துள்ளது.
அதே ஊரில் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ, வள்ளிக்கண்ணு ,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட இன்ஜினியர் ராமராஜ் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
புலியூரானைச் சேர்ந்த குருசாமி கல்குவாரி அமைக்க ஆதரவாக பேசினார்.
இதில் சிலர் குருசாமியை தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். போலீசார் மண்டபத்திற்கு வந்து அனைவரையும் எச்சரிக்கை செய்தனர்.
பின்னர் தொடர்ந்து கூட்டம் நடந்தது. பலர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கூட்டம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்படும்.
அதன் பின்னர் குவாரிக்கு உரிமம் வழங்குவதா? இல்லையா? என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய முடிவு செய்யும்.
ஏற்கனவே திருச்சுழியை சுற்றியுள்ள பகுதிகளில் கல் குவாரிகள் அதிக அளவில் அரசு அனுமதித்த அளவையை விட கற்களை வெட்டி எடுக்கின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல், நீர் நிலைகள், ரோடுகள் அனைத்தும் பாதிப்பதாகவும், விவசாயம் கேள்விக்குறியாக போய் விட்டதாகவும், இந்தப் பகுதியில் உள்ள கல்குவாரிகளை அரசு முறைப்படுத்திய பின் புதிய கல்குவாரிக்கு உரிமை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

