/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் கூட்டுறவு கட்டடம், வணிக வளாக கடைகள்
/
இடியும் நிலையில் கூட்டுறவு கட்டடம், வணிக வளாக கடைகள்
இடியும் நிலையில் கூட்டுறவு கட்டடம், வணிக வளாக கடைகள்
இடியும் நிலையில் கூட்டுறவு கட்டடம், வணிக வளாக கடைகள்
ADDED : அக் 27, 2024 03:39 AM
காரியாபட்டி : இடிந்து, ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் கூட்டுறவு கட்டடம், இடியும் நிலையில் உள்ள வணிக வளாக கடைகள் இருக்கும் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது பாராகவும் பயன்படுத்தி வருவது, ஆட்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுவது உள்ளிட்ட காரணங்களால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டியில் கூட்டுறவு வங்கி கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆகின. வலுவிழந்து அவ்வப்போது கூரையிலிருந்து கான்கிரீட் விழுந்ததால் அலுவலகத்தை காலி செய்து அருகில் உள்ள கட்டடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் அருகில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க ஆட்கள் எப்போதும் வந்து கொண்டே இருப்பர். கூட்டுறவு வங்கிக்கு வாடிக்கையாளர்கள், விவசாயிகள் என பலரும் வந்து செல்வார்கள். ஆபத்தான, இடியும் நிலையில் உள்ள கட்டடம் அருகே நிற்கின்றனர்.
இக்கட்டடத்தை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டடத்தின் அருகே எச்சரிக்கை பலகை மட்டுமே வைத்துள்ளனர். அதேபோல் வணிக வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின. பெரும்பாலானோர் விபத்து அச்சத்தை உணர்ந்து கடைகளை பூட்டி விட்டு சென்றனர். இதனை சாதகமாக்கி திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் அப்பகுதியில் நடமாட அச்சப்படுகின்றனர். திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளது. வணிக வளாக வீதியில் சனிக்கிழமை தோறும் கோழிச் சந்தை நடைபெறும். சந்தைக்கு வரும் வியாபாரிகள் துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர். விபத்திற்கு முன் சேதமடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வலுவிழந்த கட்டடங்கள்
சுரேஷ், தனியார் ஊழியர்: கட்டடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வலுவிழந்து எப்போது இடிந்து விழுமோ தெரியாது. இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. விபத்து நடப்பதற்கு முன் பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தி நவீன வசதிகளுடன் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்படுத்த வேண்டும்
திருமலை, தனியார் ஊழியர்: வணிக வளாக கடைகளுக்குள் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி மது குடிப்பவர்கள் அப்பகுதியில் உட்கார்ந்து குடிக்கின்றனர். போதை தலைக்கு ஏறியதும் பாட்டில்களை உடைக்கின்றனர். தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோட்டோரம் மண் குவியல்கள்
பழனிச்சாமி, தனியார் ஊழியர்: நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ரோட்டோரத்தில் கிடந்த கிராவல் மண்ணை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் உள்ள மண் குவியல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.