/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் பட்டா மாறுதலில் வசூல் வேட்டை
/
அருப்புக்கோட்டையில் பட்டா மாறுதலில் வசூல் வேட்டை
ADDED : செப் 25, 2024 03:22 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பட்டா மாறுதலில் இடைத்தரகர்களின் வசூல் வேட்டை வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியிலேயே நடப்பதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் பட்டா மாறுதல் செய்ய விரும்புபவர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் தனி தாசில்தார்களை அணுகலாம் என மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை நகரில் வார்டு இ பிளாக் 5ல் உள்ளடக்கிய பகுதிகளுக்கு நகர நிலவரித் திட்டத்தின் கீழ் வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் தங்களது கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டுமனைகளுக்கு கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாக பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும், பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பவர்கள் தங்களிடம் உள்ள பத்திர ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பட்டாவில் மாற்றம் செய்ய விரும்பும் மக்கள் ஆவணங்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு படையெடுக்க துவங்கினர். ஆனால் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் பல்வேறு காரணங்களை கூறி சரி செய்து வருமாறு மக்களை திருப்பி அனுப்புகின்றனர்.
இதன் பயன்படுத்தி ஒரு சில இடை தரகர்கள் 1 பட்டா விற்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டை செய்கின்றனர். மக்கள் தனியாக சென்று பட்டா வாங்க முடியாமல், இடை தரகர்களை அணுகி காசு கொடுத்து பட்டா மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் பட்டா மாறுதல் செய்ய லட்சக்கணக்கில் பணம் செலவிட வேண்டியதாக புகார் கூறியுள்ளார்.
ஆனாலும் வருவாய்த்துறையினர் இது குறித்து கண்டும் காணாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தொகுதியிலேயே இந்த நிலைமை உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பொன்ராஜ், தனி தாசில்தார், நகர நில வரி திட்ட அலுவலகம், அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பிளாக் வாரியாக பட்டா மாறுதலுக்கு மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதற்கென இடை தரகர்கள் அணுகி மக்களிடம் பணம் பெற்றால் உடன் அலுவலகத்தில் தகவல் கூறலாம். உடன் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் நேரடியாக பட்டா சம்பந்தமாக அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.