/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள்
/
15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள்
15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள்
15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகங்கள்
ADDED : செப் 28, 2024 04:53 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் விஸ்வநத்தம் ரோட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பயன்பாட்டில் இல்லாததாலும், பெயரளவிற்கு மட்டுமே செயல்படும் நவீன இறைச்சி கூடத்தாலும் அரசு நிதி வீணாகியுள்ளது.
சிவகாசி நகரில் ஆடு, மாடு, கோழி , மீன் உள்ளிட்ட இறைச்சிகளை , குடியிருப்பு பகுதி, மக்கள் நடமாடும் பகுதி, திறந்த வெளியில் வெட்டி இறைச்சி வியாபாரிகள் நகரை மாசுபடுத்தி வந்தனர்.
எனவே நகரை துாய்மைப்படுத்தும் நோக்கில் விஸ்வநத்தம் செல்லும் ரோட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நவீன இறைச்சி கூடமும், இறைச்சியை விற்பனை செய்ய வணிக வளாகத்தில் 126 கடைகளும் நகராட்சி சார்பில் கட்டப்பட்டது.
இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டது. மக்களும் வேறு எங்கும் இறைச்சிக்காக அலையாமல் ஒரே இடத்தில் வாங்கி பயன்பெறலாம். கட்டப்பட்ட சில நாட்கள் மட்டும் கண்துடைப்பாக இவைகள் செயல்பட்டு வந்தன. அதன் பின்னர் செயல்படவில்லை.
செயல்படாத கட்டடங்களுக்குச் செல்ல ரோடு வசதி ஏற்படுத்த 2009 ல் 50 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. அந்தப் பணமும் வீணாகி விட்டது. தற்போது ஒரு சில கடைகள் செயல்படுகின்றன. ஆனால் அவை இறைச்சிக் கடைகள் இல்லை. வேறு ஏதோ பயன்பாட்டிற்கு உள்ளது.
கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இன்றும் அவைகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. மேலும் இப்பகுதியே 'பாராகவும்' சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விட்டது. இறைச்சி வதை கூடமும், வணிக வளாக கட்டங்களும் உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து விட்டது. முழுவதும் முட்புதர்களும், சீமைக்கருவேல மரங்களும் நிறைந்திருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் மாறிவிட்டது.
தற்போது இறைச்சி வதை கூடம் மட்டும் பெயரளவிற்கு செயல்படுகின்றது. இங்கு வெட்டப்படுகின்ற இறைச்சிகள் மீண்டும் நகருக்கு உள்ளே தான் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றது.
அதே சமயத்தில் தற்போது இப்பகுதியில் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் வணிக வளாகங்களை கண்டுகொள்ளவில்லை. எனவே ஓரளவிற்கு நன்றாக உள்ள கட்டடங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.